/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்
/
சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்
சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்
சுந்தராபுரம் சந்திப்பில் தயவு தாட்சண்யமின்றி... ஆக்கிரமிப்புகளை துாக்கி வீச வேண்டும்! l அப்போதுதான் 'யூ டேர்ன்' சாத்தியமாகும்
ADDED : ஜூன் 19, 2025 05:50 AM

கோவை : கோவை சுந்தராபுரம் சந்திப்பில், சோதனை அடிப்படையில், 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டிருக்கிறது. சிக்னலில் காத்திருக்காமல் செல்வது வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருந்தாலும், திருப்பங்களில் திரும்புவதற்கு திணறுகின்றனர். அதனால், ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யமின்றி, அகற்றிக் கொடுக்க வேண்டியது மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் பொறுப்பு.
கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சுந்தராபுரம் சந்திப்பில் நான்கு ரோடுகள் இணைகின்றன. 'பீக் ஹவர்ஸில்' வாகனங்கள் வெகுநேரம் காத்திருந்து செல்ல நேரிட்டது. அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்து செல்வதற்கு சிரமப்பட்டன.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்
இதற்கு தீர்வு காண, சுந்தராபுரம் சந்திப்பை கடக்கும் பகுதியில், ஒரு கி.மீ., துாரத்துக்கு ரூ.60 கோடியில் மேம்பாலம் கட்ட வேண்டுமென, 2018ல் அப்போதைய பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன் வலியுறுத்தினார்.
உத்தேச வரைபடம் தயாரித்து, மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.
அப்போது, முதல்கட்டமாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பின், நிதி ஒதுக்கி, நிர்வாக அனுமதி வழங்காததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
ஆக்கிரமிப்பால் அவஸ்தை
தற்சமயம் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து பெருகி வருவதால், இச்சந்திப்பில் நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி தலைமையிலான குழு ஆய்வு செய்து, 'யூ டேர்ன்' வசதி அமல்படுத்த பரிந்துரைத்தது.
அதையேற்ற மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி, பரீட்சார்த்த முறையில் செயல்படுத்த, போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, இரு நாட்களாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து சுங்கம் வீதிக்கு திரும்பும் இடத்தில், போலீஸ் நிழற்குடை இடையூறாக இருக்கிறது. பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன.
சங்கம் வீதியில் ஆக்கிரமிப்பு
சங்கம் வீதி மற்றும் போத்தனுார் சாரதா மில் ரோடு, 40 - 60 அடி அகலம் கொண்டவை; ஆக்கிரமிப்புகளால் சுருங்கியிருக்கின்றன.
மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருப்பதால், அதை பயன்படுத்தி, ரோட்டின் இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு காணப்படுகிறது. மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை இட மாற்றி நட வேண்டும்.
அதேபோல், ரோட்டின் எல்லையை அளவீடு செய்யாமல், மாநகராட்சியில் இருந்து இஷ்டத்துக்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, மழை நீர் வடிகால் வரை கடைக்காரர்கள் தங்களது கடையை நீட்டித்துள்ளனர்.
தயவு தாட்சண்யம் கூடாது
இதேபோல், சுங்கம் வீதியில் இருந்து சாரதா மில் ரோட்டில் திரும்பும் இடத்தில் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். திருப்பத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு இருக்கிறது. அவற்றை இடித்து அகற்ற வேண்டும். மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து ஆவணங்களை ஒப்பிட்டு, ரோட்டை அளவீடு செய்து, தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் ஒருமித்த வேண்டுகோள்.