/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்பு துறை-வருவாய் துறையினர் எச்சரிக்கை
/
தீயணைப்பு துறை-வருவாய் துறையினர் எச்சரிக்கை
ADDED : மே 26, 2025 11:17 PM
பெ.நா.பாளையம், ; வெள்ளத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை என, பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வெள்ளநீர் செல்லும் பாதைகளில் கழிவுப்பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளை போடக்கூடாது.
பழைய அனுபவங்களில் இருந்து மழை நீர் செல்லும் பாதையினை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மின்சார வாரியம் போன்ற துறைகளில் பணி செய்யும் உள்ளூர் அலுவலர்களின் மொபைல் எண்களை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். இடி, மின்னலின் போது மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது, வீட்டில், 'டிவி' இணைப்பை துண்டித்தல் வேண்டும்.
வதந்திகளை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். வெள்ளத்தின் போது, தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் காலதாமதம் இன்றி கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும்.
வெள்ளத்தைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், கண்டிப்பாக கையில் குச்சியை வைத்துக்கொண்டு, வெள்ள நீரின் ஆழம் மற்றும் மண்ணின் உறுதித் தன்மை ஆகியவற்றை அறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ள நீரிலோ அல்லது அதன் அருகிலோ சிறுவர்களை விளையாட அனுமதிக்க கூடாது. மின்சார ஒயர்களை தொட்டுக்கொண்டு தண்ணீர் சென்றால், அந்த தண்ணீரில் நடக்க வேண்டாம். மின்சார ஒயர் அறுந்து கிடந்தால், உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.