/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய குப்பையை வேகமாக அகற்றணும்!
/
பழைய குப்பையை வேகமாக அகற்றணும்!
ADDED : ஜன 26, 2024 01:22 AM
கோவை;வெள்ளலுார் குப்பை கிடங்கில் பழைய குப்பையை வேகமாக அப்புறப்படுத்தி இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காதது, இ-வேஸ்ட் என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பையானது வெள்ளலுார் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டதால் மலைபோல் தேங்கியுள்ளது.
இதனால், துர்நாற்றம், ஈ தொல்லை என சுகாதார சீர்கேடு பிரச்னைகளை வெள்ளலுார் சுற்றுப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணுமாறு, குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் கடந்த, 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,'வெள்ளலுார் குப்பை கிடங்கில் பழைய குப்பை அழிப்பு விஷயத்தில் அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்த்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன இயந்திரங்கள் வாயிலாக இக்குப்பையை வேகமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரிமக் கழிவு மாற்றிகள் மற்றும் கரிம கழிவுகளை மேலாண்மை செய்வதால் தற்போது குவியும் குப்பை அளவை கட்டுப்படுத்துவதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக எந்த பதிலும் மாநகராட்சி தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை.
கடந்தாண்டு நவ., முதல் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில், வெள்ளலுார் கிடங்கில் குப்பை அழிப்பு பணிகளை வேகப்படுத்தி, இடத்தை மீட்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த விசாரணை மார்ச் 4ம் தேதி நடைபெறும்' என, பசுமை தீர்ப்பாயம் தரப்பில் தெரிக்கப்பட்டது.

