/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் சாகுபடி 'சர்வே' பணியில் 'அவுட்சோர்ஸிங்' வி.ஏ.ஓ.,க்களின் கோரிக்கைக்கு அரசு அனுமதி
/
பயிர் சாகுபடி 'சர்வே' பணியில் 'அவுட்சோர்ஸிங்' வி.ஏ.ஓ.,க்களின் கோரிக்கைக்கு அரசு அனுமதி
பயிர் சாகுபடி 'சர்வே' பணியில் 'அவுட்சோர்ஸிங்' வி.ஏ.ஓ.,க்களின் கோரிக்கைக்கு அரசு அனுமதி
பயிர் சாகுபடி 'சர்வே' பணியில் 'அவுட்சோர்ஸிங்' வி.ஏ.ஓ.,க்களின் கோரிக்கைக்கு அரசு அனுமதி
ADDED : ஜன 10, 2024 12:57 AM
திருப்பூர்,;'விவசாய நிலங்களில், 'டிஜிட்டல்' முறையில் பயிர் சாகுபடி பரப்பு ஆய்வு செய்யும் பணியில், வெளியாட்களை நியமித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு அனைத்து கிராம அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், பயிர் சாகுபடி பரப்பு குறித்த துல்லிய பதிவு இல்லை என்ற குறை, நீண்ட காலமாக இருந்து வருகிறது. சில மாவட்டங்களில், பட்டாக்களின் மொத்த அளவை விட, இன்சூரன்ஸ் செய்த நிலத்தின் அளவு கூடுதலாக இருப்பது, தெரிய வந்திருக்கிறது.
இதனால், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில், கிராம பயிர் சாகுபடி பரப்பை கணக்கிட, மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தன. அதன்படி, பயிர் சாகுபடி விவரங்களை பதிவேற்றம் செய்து, ஆவணப்படுத்தும் பணியை, வருவாய்த்துறையினர் வாயிலாக மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.
'ஏற்கனவே பணிச்சுமை அதிகம் என்ற நிலையில், இப்பணியை மேற்கொள்வது கடினம்,' என, வி.ஏ.ஓ., சங்கத்தினர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால், இப்பணியை வேளாண் துறையினர் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
'பயிர் அடங்கல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வருவாய்த்துறையினர் வசமே இருக்கும் என்ற நிலையில், அவர்களே 'சர்வே' பணியில் ஈடுபடுவது தான் உகந்ததாக இருக்கும் எனக் கூறி, வேளாண் துறையினர் பின்வாங்கினர். இதையடுத்து, 'இப்பணியை வி.ஏ.ஓ.,க்களே மேற்கொள்ள வேண்டும்' என வருவாய் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இது குறித்து, வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அழகிரிசாமி கூறியதாவது:
ஏற்கனவே உள்ள பணிச்சுமையில், 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணியில், வி.ஏ.ஓ.,க்கள் மட்டுமே ஈடுபட முடியாது என்ற சூழலில், 'சர்வே' பணிக்கு தகுதியான நபர் ஒருவரை, வி.ஏ.ஓ., நியமித்து கொள்ளலாம் என, வருவாய்த்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
'இப்பணி மேற்கொள்ள உரிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்ற எங்கள் கோரிக்கையும் ஏற்கப்பட்டு, 'சர்வே' பணிக்கு குறிப்பிட்ட தொகை, நிதித்துறையிடம் பெற்று வழங்கப்படும் எனவும், சர்வே எடுக்க வசதியாக, 'டேப்' வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

