/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனைத்து பகுதியிலும் பல மணி நேரம் கொட்டியது பெய்யென பெய்த மழை!நீராதாரங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் நிம்மதி
/
அனைத்து பகுதியிலும் பல மணி நேரம் கொட்டியது பெய்யென பெய்த மழை!நீராதாரங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் நிம்மதி
அனைத்து பகுதியிலும் பல மணி நேரம் கொட்டியது பெய்யென பெய்த மழை!நீராதாரங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் நிம்மதி
அனைத்து பகுதியிலும் பல மணி நேரம் கொட்டியது பெய்யென பெய்த மழை!நீராதாரங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் நிம்மதி
ADDED : ஜன 09, 2024 07:55 PM
- நிருபர் குழு -
சில மாத இடைவெளிக்கு பிறகு, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் நேற்று காலை முதல் பல மணி நேரம் மழை பெய்தது. அனைத்து ஓடைகள் மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உடுமலை பகுதியில், விவசாய சாகுபடிக்கு ஆதாரமாக வடகிழக்கு பருவமழை உள்ளது. கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யாமல், அனைத்து பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டது.
இதனால், வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கடந்தாண்டு, குறிப்பிட்ட நேரத்தில், வடகிழக்கு பருவமழையும் துவங்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர் மழையால் பாதிப்பு ஏற்பட்ட போதும், இப்பகுதிக்கு மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது.
மானாவாரி பாதிப்பு
பருவமழை தாமதித்த காரணத்தால், மானாவாரியாக கொண்டைக்கடலை, கொத்தமல்லி, எள், மொச்சை உள்ளிட்ட சாகுபடி விதைப்பு பணிகள் குறித்த நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
விதைப்புக்குப்பிறகும் செடிகளின் வளர்ச்சி தருணத்தில் சாரல் மழை மட்டுமே இருந்தது. குறைந்த ஈரப்பதத்தில், மானாவாரி சாகுபடி பயிர்கள் வளர்ந்து, பூ மற்றும் பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் தற்போது உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை முதல் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பல மணி நேரம் மழை பெய்தது. இதனால், கொண்டைக்கடலை, கொத்தமல்லி செடிகளில், பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மேற்கொள்ளப்படும், மானாவாரி சாகுபடி பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது.
எனவே, குடிமங்கலம், உடுமலை வட்டாரத்தில், வேளாண், தோட்டக்கலைத்துறையினர் விளைச்சல் பாதிப்பு குறித்து, நேரடி கள ஆய்வு செய்து நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மழையால் பாதிப்பு
நேற்று காலை முதல், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலும், சமவெளியிலும் பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
மலையடிவாரத்திலுள்ள அனைத்து மழை நீர் ஓடைகளிலும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரில் தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கியது. தேசிய நெடுஞ்சாலையில், கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளமாக சென்றதால், வாகன ஓட்டுநர்கள் திணறியபடி வாகனங்களில் சென்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பருவம் தவறி பெய்த மழையால், மானாவாரி சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால், திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளுக்கு நீர் வரத்து கிடைத்து, நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், பாசனத்துக்கு தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
மழையால் கிடைத்த நீர் வரத்தைக்கொண்டு, கிராமப்புற குளங்களுக்கு பி.ஏ.பி., திட்டத்தில் தண்ணீர் வழங்கினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு, குளிர்ந்த காற்றுடன் பனிப்பொழிவும் காணப்பட்டது. லேசான சாரல் மழையும் பெய்தது.
இந்நிலையில், நேற்று காலை முதலே மழைப்பொழிவு காணப்பட்டது. காலை, 11:00 மணிக்கு மேல், மழை இடைவிடாமல் பெய்ததால், ரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் குடையுடன் வெளியே சென்றனர். தொடர் மழை மதியத்துக்கு மேல் ஓய்ந்தாலும், குளிர்ந்த காற்றுடன் மேக மூட்டமாக காணப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில், கடந்த ஆண்டு பெய்த, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையினால், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் உள்ள எந்த அணையும் நிரம்பவில்லை. இதனால், பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பழைய வால்பாறை ரோட்டில் மரம் விழுந்து, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை நீடிக்கும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

