/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
560 நோயாளிகளுக்கு நாலே டாக்டர்கள்
/
560 நோயாளிகளுக்கு நாலே டாக்டர்கள்
ADDED : ஜூலை 04, 2025 11:02 PM
அன்னுார்; 'அன்னுார் அரசு மருத்துவமனையில், 560 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நான்கு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்' என, கலெக்டரிடம், மருத்துவமனை தலைமை டாக்டர் நேருக்கு நேராக தெரிவித்தார்.
அன்னுார் அரசு மருத்துவமனையில், 3.50 கோடி ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. இப்பணி குறித்து, கலெக்டர் நேற்று விசாரித்தார். ஒப்பந்ததாரர் பதிலளிக்கையில், '8,00 சதுரடியில் மருத்துவமனை கட்டடம் கட்டப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் கட்டுமான பணி துவங்கியது; டிசம்பருக்குள் முடிக்கப்படும்' என்றார்.
கலெக்டர் பேசுகையில், 'நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் கூட தாமதிக்காமல், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.
கலெக்டரிடம், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தேவசேனா கூறுகையில், 'தினமும், 500 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்; 60 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஏழு டாக்டர்களில் ஒருவர் நீண்ட விடுப்பிலும், ஒருவர் வேறு பணிக்கும் சென்றுள்ளனர். ஒருவர் நிர்வாகப் பணியில் உள்ளார். நான்கு டாக்டர்கள், 560 பேருக்கு சிகிச்சை அளிக்கின்றனர். துப்புரவு பணியாளர், ஆண் உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நர்ஸ், டாக்டர் பற்றாக்குறை உள்ளது' என்றார்.
அதற்கு, 'இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனருடன் பேசி தீர்வு காண்கிறேன்' என, கலெக்டர் உறுதி அளித்தார். சித்த மருத்துவர் யசோதா, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.