தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முக்கியத்துவம் கொடுங்க!

முக்கியத்துவம் கொடுங்க!

முக்கியத்துவம் கொடுங்க!


ADDED : செப் 08, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்னை நார் தொழில் மேம்பாட்டுக்கு... ஏற்றுமதி அதிகரிக்க குழு அமைக்கணும்

பொள்ளாச்சி: தென்னை நார் தொழில் மேம்படுத்துவதற்கான திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், ஏற்றுமதி அதிகரிக்க குழு அமைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தென்னை நார் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர்.

இந்தியாவில் இருந்து, ஆண்டுதோறும், 9.81 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்தில் இருந்து மட்டும், ஆறு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், 90 சதவீதம் சீனாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு இருந்து, ஏற்றுமதி செய்யப்படும் தென்னை நார் பொருட்களை கொண்டு, சீனாவில், 100க்கும் மேற்பட்ட மரச்சாமான்கள், மரப்பலகை உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து, அவர்கள் ஏற்றுமதி செய்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும், தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. அதில், நார் காகிதம், ஜன்னல்களில் பயன்படுத்தப்படும் நார் விரிப்புகள், நார்பலகை, நார் தட்டு போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

தென்னை நார் தொழில்களை மேம்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மானியம் அறிவிப்பு கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சிவமுருகானந்தம் கூறியதாவது:

தமிழக அரசின், ‘டேன்காயர்’ செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், முழு நேர தலைமை செயல் அலுவலரை நியமிக்க வேண்டும். அப்போது தான், அரசு தொழில் துறை, ஏற்றுமதியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு ஏற்பட்டு, நார் தொழிலுக்கான நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த முடியும்.

தமிழக அரசு தென்னை நார் தொழில்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான கான்கிரீட் தளங்கள், பாலிெஷட் தொழிற்சாலை கட்டடங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கான மானிய திட்டத்தை அறிவித்தது. புதிய தமிழ்நாடு தென்னை நார் கொள்கையின் கீழ், நார் பித்தை உலர்த்தும் கான்கிரீட் தளங்கள் அமைக்க, 25 லட்சம் அல்லது மொத்த செலவில், 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதுபோன்று, பாலி ெஷட் அமைக்க மானியம் அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு பெருகும் இத்திட்டத்தின் நோக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறனை உயர்த்தி, தரமான உற்பத்தியை ஊக்குவிப்பதாகும். நடைமுறையில் நிலவும் நிர்வாக மற்றும் செயல்முறை சிக்கல்கள் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் பல தொழில் முனைவோர் மானியத்தை பெற முடியாத நிலை உள்ளது. இதன் விளைவாக இத்திட்டத்தின் பயன் தொழில்துறைக்கு முழுமையாக சென்றடையவில்லை.

எனவே, இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்தி ஆவணத்தேவைகள் மற்றும் ஒப்பந்த செயல்முறைகளை சீரமைத்து மானியத்தை தொழில் முனைவோர் எளிதில் பெறும் வகையில், குழு அமைத்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால், அதிக ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்.

கண்காட்சி நடத்தணும்! பொள்ளாச்சியில அமைக்கப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையத்துக்கு தேவையான அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்து முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஏற்றுமதிக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவித்து நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

மற்ற மாநிலங்களில், தென்னை நார் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து, கண்காட்சி நடத்தப்படுகிறது. அண்டை மாநிலத்தில், தனி அமைச்சகம் அமைத்து, தென்னை நார் தொழிலை மேம்படுத்துகின்றனர். அதுபோன்று தமிழகத்திலும் இத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தொழில் மேம்படும்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us