/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்துாரில் இரு வாரங்களாக குடிக்க நீரின்றி மக்கள் தவியாய் தவிப்பு சாலை மறியல் செய்யுமளவுக்கு கடுப்பு

ADDED : பிப் 06, 2024 12:43 AM

பேரூர்;இரண்டு வாரத்துக்கு மேலாகியும் குடிநீர் வினியோகிக்காததால், கிராம மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.
தொண்டாமுத்துார் வட்டார கிராமங்களுக்கு சிறுவாணி, பவானி நீராதாரங்கள் வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பல கிராமங்களுக்கு இரண்டு வாரத்துக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
குறிப்பாக, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, மத்வராயபுரம், நல்லுார் வயல், சப்பாணிமடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுவாணி குடிநீர் ஏர்வால்வுகளில் வடியும் நீரை பிடிக்க பல கி.மீ., பயணிக்கின்றனர். அங்கும் கூட்டம் அலைமோதுவதால், மணிக்கணக்கில் காத்திருந்து குடிநீர் பிடித்து செல்கின்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'இரண்டு வாரங்களை கடந்தும், குடிநீர் வினியோகம் இல்லை. சிறுவாணி ரோட்டில் இருந்த பொது குழாய்களிலும், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
உப்பு தண்ணீரை குழந்தைகள் குடிக்க மறுக்கின்றனர். இதனால், இரவு நேரத்தில் சென்று, சின்னாற்றில் உள்ள சிறுவாணி ஏர்வால்வில், வடியும் நீரை பிடித்து வருகிறோம். விரைவில் குடிநீர் வினியோகிக்க வேண்டும்' என்றனர் விரக்தியுடன்.
இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணாததை கண்டித்து, நேற்று மாலை தொம்பிலிபாளையம் மக்கள், 100க்கு மேற்பட்டோர் சிறுவாணி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
மத்வராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர், ஆலாந்துறை மற்றும் நல்லுார் வயல் போலீசார், மக்களுடன் பேச்சு நடத்தினர். சமாதானமடையாத மக்கள், போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், சிறுவாணி ரோட்டில் பல கி.மீ.,க்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.