/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்! கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மாணவ, மாணவியர் அபாரம்
/
கோவையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்! கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மாணவ, மாணவியர் அபாரம்
கோவையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்! கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மாணவ, மாணவியர் அபாரம்
கோவையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்! கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மாணவ, மாணவியர் அபாரம்
ADDED : ஜன 27, 2024 12:05 AM

கோவை மாவட்ட வருவாய்த்துறை சார்பில், வ.உ.சி., மைதானத்தில், 75வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கலெக்டர் கிராந்திகுமார், தேசியக்கொடி ஏற்றி, வண்ண பலுான்களை பறக்க விட்டார். அவருக்கு, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். அணிவகுப்பு மரியாதையை, கலெக்டர் கிராந்திகுமார் ஏற்றுக்கொண்டார்.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பதக்கம் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழை, குடியரசு தின விழாவில், கலெக்டர் கிராந்திகுமார் வழங்கி கவுரவித்தார்.
மைதானத்தில் போலீசார் ஒவ்வொரு அணியாக, அணிவகுத்து நின்றிருந்தனர். அவர்களை பார்வையிட, திறந்த ஜீப்பில், கலெக்டரை, எஸ்.பி., பத்ரிநாராயணன் அழைத்துச் சென்றார். சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும், கலெக்டர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின், மாநகர போலீஸ் சார்பில், 67 போலீசார், மாவட்ட போலீசார் சார்பில், 37 போலீசார் என, 104 போலீசாருக்கு பதக்கம் அணிவித்து கவுரவித்தார். துறை தலைமை அலுவலர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட, 208 பேருக்கு நன்சான்றிதழ் வழங்கினார்.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் சி.டி.ஜி., மாடல் பள்ளி, அன்னுார் கே.ஜி., அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜவீதி சி.சி.எம்.ஏ., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரசன்டேசன் கான்வென்ட், சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுங்கம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, ஆர்.எஸ்.புரம் நேரு மெட்ரிக், அல்வேர்னியா மெட்ரிக், சேரன் மாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. மாணவர்கள் அனைவருக்கும் கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்வேதா, போலீஸ் துணை கமிஷனர்கள் ராஜராஜன், சுகாசினி உட்பட பலர் பங்கேற்றனர்.

