/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லங்கா கார்னர் சந்திப்பு மேம்படுத்த சாலை பாதுகாப்பு குழு பரிந்துரை
/
லங்கா கார்னர் சந்திப்பு மேம்படுத்த சாலை பாதுகாப்பு குழு பரிந்துரை
லங்கா கார்னர் சந்திப்பு மேம்படுத்த சாலை பாதுகாப்பு குழு பரிந்துரை
லங்கா கார்னர் சந்திப்பு மேம்படுத்த சாலை பாதுகாப்பு குழு பரிந்துரை
ADDED : ஜன 27, 2024 12:01 AM
கோவை: கோவை லங்கா கார்னர் சந்திப்பு பகுதியை மேம்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு பரிந்துரைத்துள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், கடந்த டிச., மாதத்தில் மாவட்ட அளவில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
பெரும்பாலான விபத்துகளில், முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென நிறுத்தப்படும்போது, பின்தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றதும் தெரிவிக்கப்பட்டது.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில், பாதசாரிகள் விபத்துக்குள்ளாவது தொடர்பாக கவலை தெரிவிக்கப்பட்டது.
ரோட்டின் இருபுறமும் பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. பயணிகள் கடந்து செல்வதற்கு, சாலையில் வழித்தடம் இல்லை; ரோட்டின் குறுக்கே நடைபாதை பாலம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
கோவையில் முக்கியமான சாலை சந்திப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் ரோடு, திருச்சி ரோடு மற்றும் பெரிய கடை வீதியில் இருந்து வரும் வாகனங்கள் லங்கா கார்னரில் சங்கமிக்கின்றன.
இதனால் நெருக்கடி ஏற்படுவதால், அப்பகுதியை மேம்படுத்த, சாலை பாதுகாப்பு குழு சார்பில் பரிந்துரை வழங்கப்பட்டது. இதேபோல், டாடாபாத் பவர் ஹவுஸ் சந்திப்பு மற்றும் நஞ்சப்பா ரோடு பார்க் கேட் ரவுண்டானா பகுதியை மாற்றியமைக்க, கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. அதையேற்று, பரீட்சார்த்த முறையில் தற்காலிகமாக செயல்படுத்த, கலெக்டர் அனுமதி அளித்தார்.

