ADDED : ஜன 26, 2024 11:12 PM
பெ.நா.பாளையம்: பிளிச்சி ஊராட்சி கிராம சபை கூட்டம், காமாட்சிபுரத்தில் நடந்தது. தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார்.
கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என, மக்கள் புகார் தெரிவித்தனர்.
பிளிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் மூர்த்தி தலைமையில், மக்கள் மனு அளித்தனர். அதில், கோட்டை பிரிவிலிருந்து ஒன்னிபாளையம் செல்லும் ரோட்டில் ரயில் பாலம் அருகே டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
மது அருந்தும் நபர்கள், அங்குள்ள ரயில் பாதையில் அமர்ந்து கொள்கின்றனர். அப்போது அந்த வழியாக வரும் ரயிலில் அடிபட்டு இறந்து போகின்றனர். இதுகுறித்து 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் டாஸ்மாக் கடையை அகற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என, குறிப்பிட்டு இருந்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பிளிச்சி ஊராட்சி நிர்வாகத்தினர் கூறினர்.
நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்துக்கு, தலைவர் சாந்திபிரியா சந்துருஜெகவி தலைமை வகித்தார். ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில்லை என்று கூறி, துணைத் தலைவர் சின்னராஜ், உறுப்பினர்கள் சசிகலா, ராஜாமணி, ரவிச்சந்திரன் உட்பட நான்கு மன்ற உறுப்பினர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

