/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியின்றி தி.மு.க.,வினரால் அமைக்கப்பட்ட 'செல்பி பாயிண்ட்'
/
அனுமதியின்றி தி.மு.க.,வினரால் அமைக்கப்பட்ட 'செல்பி பாயிண்ட்'
அனுமதியின்றி தி.மு.க.,வினரால் அமைக்கப்பட்ட 'செல்பி பாயிண்ட்'
அனுமதியின்றி தி.மு.க.,வினரால் அமைக்கப்பட்ட 'செல்பி பாயிண்ட்'
ADDED : ஜூன் 30, 2025 11:29 PM

கோவை; வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., தயாராகி வருகிறது. கோவையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, டவுன்ஹால் மணிக்கூண்டு முன், நடைபாதையை ஆக்கிரமித்து, ஒன்று என்கிற எண் அமைப்புடன் கருப்பு, சிவப்பு நிறத்தில் 'செல்பி பாயிண்ட்' அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு மாநகராட்சி நேற்று மாலை வரை அனுமதி தரவில்லை. அது யாரால் அமைக்கப்பட்டது; அதன் அர்த்தம் என்ன என தெரியாமல், மாநகராட்சி அதிகாரிகள், நேற்று விழி பிதுங்கினர். தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக்கிடம் கேட்டதற்கு, ''ஓரணியில் தமிழ்நாடு என்கிற இயக்கத்தை மக்களிடம் விளம்பரப்படுத்த, 'செல்பி பாயிண்ட்' அமைக்கப்படுகிறது. அதன் அருகாமையில், இன்னொரு பகுதி அமைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பிடம் முறையாக அனுமதி பெற்றே வைக்க, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அனுமதி பெற்றே அமைப்போம்,'' என்றார்.
மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டதற்கு, ''மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது,'' என்றார். 'விண்ணப்பம் செய்திருந்தாலும், மாநகராட்சியில் இருந்து அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதா' என்ற கேள்விக்கு, நகரமைப்பு அலுவலர் பதிலளிக்கவில்லை.
மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகரிடம் கேட்டதற்கு, ''நகரமைப்பு அலுவலர் அல்லது கமிஷனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.