/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடைத்தரகர்களுடன் அதிகாரிகள் கூட்டு; பட்டு விவசாயிகள் குற்றச்சாட்டு
/
இடைத்தரகர்களுடன் அதிகாரிகள் கூட்டு; பட்டு விவசாயிகள் குற்றச்சாட்டு
இடைத்தரகர்களுடன் அதிகாரிகள் கூட்டு; பட்டு விவசாயிகள் குற்றச்சாட்டு
இடைத்தரகர்களுடன் அதிகாரிகள் கூட்டு; பட்டு விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : மே 27, 2025 10:57 PM

கோவை : இடைத்தரகர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைத்து கொண்டு, விலையை குறைத்து ஏலம் விடுவதாக கூறி, பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய மறுத்து, பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக வெயில் காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி குறைந்தது. மார்க்கெட்டில் விலை, முதல் தரம் ஒரு கிலோ, 550 ரூபாய்க்கும், அடுத்த தரம் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வாரம் விலை மேலும் குறைந்துஉள்ளது.
கோவை பட்டு அங்காடியில் நேற்று ஒரு கிலோ, 420 ரூபாய்க்கு குறைவாக விலை இருந்ததால், விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய மறுத்து, பட்டு அங்காடி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பொதுவாக வெயில் காலத்தில் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து, விலை அதிகரிக்கும். இந்த முறை விலை அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள மற்ற பட்டு அங்காடிகளில் ஒரு கிலோ, 650 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மார்க்கெட்டில் ஒரு கிலோ, 710 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் கோவை அங்காடியில் மட்டும் விலை, 500 ரூபாயை தாண்டுவதில்லை. இடைத்தரகர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைத்து, விலையை குறைத்து ஏலம் விடுகின்றனர்.
கிலோவுக்கு 250 ரூபாயும், 300 ரூபாயும் கொடுத்தால் விவசாயிகளுக்கு எப்படி கட்டுப்படியாகும், உற்பத்தி செலவு கூட மிஞ்சாது. போதிய விலை கொடுக்காமல், இனி இங்கு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வரமாட்டோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.