/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளுக்கு கரும்பு வந்தாச்சு
/
ரேஷன் கடைகளுக்கு கரும்பு வந்தாச்சு
ADDED : ஜன 09, 2024 08:03 PM

பொள்ளாச்சி;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் வழங்குவதற்கு, கரும்புகள் அனுப்பும் பணி நடக்கிறது.
தமிழக அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும், 1000 ரூபாய் பணம், முழு கரும்பு ஒன்றும், பொங்கல் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு, 'டோக்கன்' வினியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள், நேற்று வரை வீடு, வீடாக, 'டோக்கன்' வினியோகிப்பதில் ஈடுபட்டனர்.
இன்று முதல் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, கடைகளுக்கு பொருட்கள் மற்றும் கரும்பு அனுப்பும் பணிகள் நடக்கின்றன. அதில், கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி, பொள்ளாச்சி அரசு கல்லுாரி அருகே உள்ள காலியிடத்தில் இருந்து வாகனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்தம், 351 ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக கரும்புகள் அனுப்பப்படுகின்றன.
சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு கரும்புகள் கொண்டு வரப்பட்டன. ரேஷன் கடைகளுக்கு ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 240 கரும்புகள் அனுப்பப்படுகின்றன,' என்றனர்.

