/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்
/
முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 26, 2024 12:51 AM

அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், தைப்பூசத் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சாலையூரில், பழமை வாய்ந்த பழனியாண்டவர் கோவிலில், கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேக பூஜை நடந்தது.
காலை 9:30க்கு சாலையூர், குருக்கிளையம்பாளையம், நல்லிசெட்டிபாளையம் உட்பட பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடியை பாதயாத்திரையாக எடுத்து வந்து சன்னதியில் சமர்பித்தனர்.
நல்லிசெட்டிபாளையம் செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. பழனியாண்டவர், கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
குன்னத்துார், பழனியாண்டவர் கோவிலில், நேற்று காலை அபிஷேக, ஆராதனை, அலங்கார பூஜை மற்றும் காவடிகளை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது.
அ.குமாரபாளையத்தில் வட்டமலை ஆண்டவர் ஆலயத்தில், அபிஷேக, அலங்கார பூஜை, சுவாமி உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், முருகனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், நெய் உட்பட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதரராக அருள் பாலித்தார். பொகலுார், எல்லப்பாளையம், பொன்னே கவுண்டன்புதுார் உட்பட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.
* மேட்டுப்பாளையம், ஜடையம்பாளையம் புதுாரில் உள்ள முருகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள், பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். முருகருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
* காரமடை, கோடதாசனுாரில் உள்ள இராயர்சுவாமி கோவிலில், கல்யாண சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண விழா நடந்தது. முருகப் பெருமானுக்கு பால்குடம், தீர்த்தக்காவடி வழிபாடுகள், சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்டவை நடந்தன.
* சூலுார் வட்டாரத்தில் உள்ள கருமத்தம்பட்டி சென்னியாண்டவர், பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர், கிட்டாம்பாளையம் பழனியாண்டவர், சின்னியம்பாளையம் வேல்முருகன், கண்ணம்பாளையம் கோவை பழனி கோவில் மற்றும் காங்கயம்பளையம் சென்னியாண்டவர் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் மற்றும் மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். இன்று மாலை, இரு கோவில்களிலும் தேர் திருவிழா நடக்கிறது.
* நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள், காரமடை அருகே உள்ள குருந்தமலைக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
தெற்குபாளையத்தில் உள்ள காந்திநகர் பாலமுருகன் கோவிலில், முருகன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். துடியலுார் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சின்னதடாகம் அருகேயுள்ள காவடி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

