/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருட்டு போக்க அமைத்த விளக்கே திருட்டு!
/
இருட்டு போக்க அமைத்த விளக்கே திருட்டு!
ADDED : பிப் 06, 2024 12:18 AM

போத்தனூர்;தில்லை நகரில் இருட்டை போக்க பல நாட்களாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில், சோலார் தெரு விளக்கு அமைக்கப்பட்டது. அந்த விளக்கையே மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
போத்தனூர் அடுத்துள்ள செட்டிபாளையம் பேரூராட்சியின் ஒன்றாவது வார்டுக்குட்பட்டது தில்லை நகர் சுற்றுப்பகுதிகள். இங்கு செல்ல, மயிலாடும்பாறை பகுதியில் ரயில்வே கீழ்பாலம் உள்ளது. தில்லை நகர், 36 ஏக்கர் பரப்பில் பிரிக்கப்பட்டது.
இங்கு சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. அடிக்கடி திருட்டு சம்பவம் நடக்கிறது. தெரு விளக்கு அமைக்க கோரியும் அமைக்கவில்லை.
இதையடுத்து, இப்பகுதியை சேர்ந்தோர் தங்கள் செலவில் ரயில்வே கீழ்பாலம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன், மூன்று சோலார் லைட்டுகள் அமைத்தனர்.
நேற்று முன்தினம், பாலத்தினை ஒட்டிய கம்பத்திலிருந்த சோலார் விளக்கை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
திருட்டை தடுக்க போடப்பட்ட சோலார் விளக்கே, திருட்டு போனதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து குடியிருப்போர், பேருராட்சி தலைவரும், வார்டு கவுன்சிலருமான ரங்கசாமியிடம் மனு கொடுத்தனர். செட்டிபாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.