/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - பொள்ளாச்சி வழியாக கொல்லத்துக்கு ரயில் இயக்கணும்!
/
கோவை - பொள்ளாச்சி வழியாக கொல்லத்துக்கு ரயில் இயக்கணும்!
கோவை - பொள்ளாச்சி வழியாக கொல்லத்துக்கு ரயில் இயக்கணும்!
கோவை - பொள்ளாச்சி வழியாக கொல்லத்துக்கு ரயில் இயக்கணும்!
ADDED : செப் 01, 2025 10:17 PM

பொள்ளாச்சி; கோவையில் இருந்து, பொள்ளாச்சி வழியாக கொல்லத்துக்கு ரயில் இயக்க வேண்டும், என தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை ரயில்நிலைய சந்திப்புக்கு அருகே கலெக்டர், போலீஸ் கமிஷனர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை, 30 - 40 சதவீதம் குறைக்க அனைத்து ரயில்களும், வட கோவை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் வாயிலாக, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், சிவானந்தா காலனி, காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வட கோவை ரயில் நிலையத்தை பயன்படுத்த முடியும். அங்கு போதுமான மின்விளக்குகள், அணுகு சாலைகள், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும்.
தற்போது, திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே தெற்கு கேரள பயணியர் பழநிக்கு வருவதற்கு நேரடி ரயில் சேவையாக உள்ளது. இந்த ரயிலை, ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எர்ணாகுளம் - வேளாங்கன்னி ரயிலை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, மதுரை, தென்காசி வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்க வேண்டும்.
மீட்டர்கேஜ் காலத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, மதுரை, தென்காசி வழியாக கொல்லத்துக்கு இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.