/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் நிரம்பிய நீர்நிலைகள்; வனத்துறையினர் நிம்மதி
/
மழையால் நிரம்பிய நீர்நிலைகள்; வனத்துறையினர் நிம்மதி
மழையால் நிரம்பிய நீர்நிலைகள்; வனத்துறையினர் நிம்மதி
மழையால் நிரம்பிய நீர்நிலைகள்; வனத்துறையினர் நிம்மதி
ADDED : அக் 20, 2025 10:09 PM
பொள்ளாாச்சி: தொடர்ந்து பெய்யும் மழையால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனத்தில் உள்ள நீர்நிலைகள், தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ., பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த வனப்பகுதியில் அதிகப்படியான யானை, காட்டெருமை், மான், குரங்கு, புலி உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு வகையான பறவையினங்களும் காணப்படுகின்றன.
இவைகள், வனப்பகுதியில் உள்ள குட்டைகள், ஓடை, சிற்றோடை உள்ளிட்ட நீராதாரங்கள் வாயிலாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இதுதவிர, வனத்துறை வாயிலாக, தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் உள்ளிட்ட செயற்கை நீராதாரமிக்க பகுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுடன் கூடிய தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடையில் வறட்சி ஏற்பட்டால், அதற்கேற்ப செயற்கை நீராதாரமிக்க பகுதிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக, மழை பெய்து வருவதால், சிற்றாறுகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்து, நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. வனவிலங்குகளும், வாழ்விடத்திற்கு ஏற்றாற்போல், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது.
வனத்துறையினர் கூறியதாவது:
ஒவ்வொரு வனவிலங்கும், உணவு மற்றும் தண்ணீருக்காக குறிப்பிட்ட பரப்பில் சுற்றித் திரியும். எனவே, அவற்றின் வாழ்விடத்தை பொறுத்து, வனச்சரக பகுதிகளில் உள்ள செயற்கை நீராதாரமிக்க தண்ணீர் தொட்டி, பண்ணைக் குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், டிராக்டர்கள் வாயிலாகவும் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக பெய்யும் மழையால், வனத்தில் உள்ள நீர் நிலைகள் தண்ணீரால் நிரம்பி உள்ளன. அனைத்து வனவிலங்குகளும் எளிதில் தாகம் தீர்த்து கொள்கின்றன.
இவ்வாறு, கூறினர்.

