/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொட்டை மாடி விரிசல்களை நாமே சரி செய்யலாம்!
/
மொட்டை மாடி விரிசல்களை நாமே சரி செய்யலாம்!
ADDED : ஜன 27, 2024 12:06 AM

நமது வீட்டின் மொட்டை மாடி மீது ஆங்காங்கே உள்ள விரிசல்களை பார்த்திருப்போம். அதில் தொடர்ந்து பெய்யும் மழையால்,நீர் கசிய ஆரம்பிக்கும். இது நாளாக நாளாக விரிசலில் இருக்கும் துவாரம் பெரிதாகி பெரிதாகி பெரிய இடைவெளியாக வாய்ப்பு அதிகம்.
இதை சரி செய்வது குறித்து, கோயமுத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் (கொசினா) அமைப்பு முன்னாள் தலைவர் கார்த்திக் கூறியதாவது:
இது போன்ற விரிசல்களை, நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.
நகர்ப்புறமோ, கிராமப்புறமோ, அநேக வீடுகளில் மொட்டை மாடிகளில் சிறிய விரிசல்கள் நாம் பார்த்திருப்போம்.
அந்த சிறிய விரிசல்களை யாரைக் கொண்டு சரி செய்வது என்று அறியாமலும் இருப்போம் அல்லது சிறிய விரிசல் தானே என்று அலட்சியமாகவும் இருப்போம். இனிமேல் அப்படிப்பட்ட விரிசல்களையோ, நீர்கசிவையோ கண்டால், விரிசல்கள் இருக்கும் இடத்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, வால் கட்டிங் பிளேடு அல்லது சிறிய பட்டித்தகடை கொண்டு அந்த விரிசல்களை சிறிது ஆழம் மற்றும் அகலம் செய்து கொள்ள வேண்டும்.
பின், அந்த இடத்தில் சைக்கிள் காற்றடிப்பான் கொண்டு அந்த தூசி இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பழைய அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தேவையான அளவு பெட்ரோலை ஊற்றிக்கொள்ள வேண்டும். அதனுள் தெர்மாகோல் அட்டையை உடைத்து பெட்ரோல் உள்ள பாத்திரத்தில் போடவும். அந்த தெர்மாகோல் அட்டைகள் பெட்ரோலுடன் உருகி கரைந்து விடும்.
இப்பொழுது இந்த கரைசல் ஒரு பேஸ்ட் போல இருக்கும். அதை எடுத்து ஒரு பெரிய வாயுள்ள சிரஞ்சு வாயிலாக விரிசல் பகுதிக்குள் செலுத்த வேண்டும்அல்லது கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு அந்த பேஸ்ட்டை, விரல்களில் எடுத்து அந்த விரிசல் மீது உள்ளே அழுத்தவும். பின்னர் பட்டி தகடுகளை எடுத்து விரிசல் மீதுள்ள பேஸ்ட்டை மட்டம் செய்யவும்.
ஆங்காங்கே காற்று குமிழ்கள் வரக்கூடும். அதை பட்டித் தகட்டினைக் கொண்டு சரி செய்யவும். அரை மணி நேரம் கழித்து இந்த பேஸ்ட்டினை மீண்டும் ஒரு முறை தயார் செய்து அந்த விரிசல் மீது இரண்டாம் முறை, முன்னர் செய்தபடியேபயன்படுத்த வேண்டும்.
முதல் முறை உள்ளே உள்வாங்கிக்கொண்ட இடத்தில் இரண்டாம் முறை அப்ளை செய்யும் போது, அந்த இடுக்குகள் நன்றாக அடைத்துக் கொள்ளும். அதை மீண்டும் பட்டித்தகடைக் கொண்டு மட்டம் செய்யவும்.
இது பெட்ரோல் கரைசல் என்பதால், உடனடியாக காய்ந்து விடும், சிறிது காலத்திற்கு இந்த விரிசல்களால் நமக்கு எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. இம்முறையை உங்கள் வீட்டினுள் இருக்கும் சிறிய விரிசல்களை சரி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

