/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பளபளப்பாக மாறுமா பாலமலை தார் ரோடு
/
பளபளப்பாக மாறுமா பாலமலை தார் ரோடு
ADDED : ஜூன் 09, 2025 10:19 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவில் மற்றும் மலை கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதையின் கீழ் பகுதி தார் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால், பழங்குடியினர் மற்றும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.
கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவில் மற்றும் பெரும்பதி, பெருக்குப்பதி, பெருக்கைப்பதி புதுார், மாங்குழி பசுமணி, பசுமணிபுதுார், குஞ்சூர்பதி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ரங்கநாதர் கோவில் ராமானுஜர் வருகை தந்த சிறப்பை பெற்றது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, கோவிலை சுற்றியுள்ள மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். பழங்குடியினர் மாணவர்களும் கல்வி கற்க பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், கோவனுார் மலையடிவாரத்தில் இருந்து வனத்துறை செக் போஸ்ட் வரை ஒரு கி.மீ., வரை உள்ள தார் ரோடு செப்பனிடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. தார் சாலை ஆங்காங்கே பெயர்ந்து கிடப்பதால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ''கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் வந்து செல்லும், பக்தர்களின் கூட்டம் அதிகமாகி வருகிறது. மலை மீது உள்ள மலைப்பாதை செப்பனிடப்பட்டு, ஓரங்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, சீராக உள்ளது. ஆனால், மலை அடிவாரத்தில் பழுதான நிலையில் உள்ள தார் சாலையை செப்பனிட, உள்ளாட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் பக்தர்களும், அன்றாடம் சென்று வரும், மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களும் பெரும் பயன் அடைவார்கள்,'' என்றனர்.