/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நவீன முறையில் வெள்ளாற்றில் பாலம் கட்டும் பணி தீவிரம்: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
/
நவீன முறையில் வெள்ளாற்றில் பாலம் கட்டும் பணி தீவிரம்: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
நவீன முறையில் வெள்ளாற்றில் பாலம் கட்டும் பணி தீவிரம்: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
நவீன முறையில் வெள்ளாற்றில் பாலம் கட்டும் பணி தீவிரம்: கடலுார் - அரியலுார் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 13, 2024 12:56 AM

சென்னை - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால், கடலுார், பச்சையாங்குப்பம் முதல் சின்னசேலம் கூட்டுரோடு வரையிலான மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக (சி.வி.எஸ்.,) தரம் உயர்த்தப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்து, வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
தொடர்ந்து, விருத்தாசலம் நகரில் இருந்து சென்னைமார்க்கத்தில், உளுந்துார்பேட்டை நகரம் வரை 22 கி.மீ., தொலைவிற்கு 136 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் சென்னை, சேலம், கடலுார், புதுச்சேரி மார்க்கமாக செல்லும் நெடுந்துார வாகனங்கள் நெரிசலின்றி செல்கின்றன.
இதற்கிடையே, விருத்தாசலம் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., அருகே வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், விருத்தாசலம் - கடலுார் சாலையில், புதுக்கூரைப்பேட்டை முதல் வேளாண் அறிவியல் நிலையம் வரை சர்வீஸ் சாலை வசதியுடன், 37 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
இருப்பினும், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் இருவழிச்சாலையாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இதைத் தவிர்க்கும் வகையில், விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டம் சார்பில் விருத்தாசலம் புறவழிச்சாலை, சித்தலுார் ரவுண்டானா முதல் ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 8.5 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருந்து கடலுார் மாவட்ட எல்லையான ஸ்ரீமுஷ்ணம் பிரிவு சாலை வரை 98 கோடி ரூபாய் மதிப்பில் 6.8 கி.மீ., தொலைவிற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதில், கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் செல்லும் வெள்ளாற்றில் 20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன டெக்னாலஜி முறையில் பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. வெள்ளாற்றில் பில்லர்கள் மட்டும் கட்டி, அதற்கான மேல் தளங்களை (ஸ்பேன்கள்) தனியாக தயாரித்து, அழுத்தம் முறையில் ஸ்ட்ரெசிங் தொழில் நுட்பத்தில் கட்டும் பணி நடந்து வருகிறது. 1.8 அடி உயரத்தில் தயாரிக்கப்படும் ஸ்பேன்கள், ராட்சத கிரேன்கள் மூலம் மணிமுக்தாற்றில் இருந்து பாலத்தின் மீது துாக்கி வைக்கப்பட்டு, பில்லருடன் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மூன்று மாதங்களுக்குள் பணிகள் முழுமையாக முடிந்து, புதிய பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வி.கே.டி., சாலைக்கு மாற்று
பொதுவாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக வரும் வாகனங்கள், விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்கிறது. இந்நிலையில் வி.கே.டி., சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் இருந்து விருத்தாசலம், ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்கின்றன.
தற்போது, இருவழிச்சாலையாக உள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் வெள்ளாற்றில் பாலம் திறக்கப்பட்டதும், நான்கு வழிச்சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், வி.கே.டி., சாலைக்கு மாற்று வழி கிடைத்துள்ளதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணைக்கரை பாலத்தில் பாதிப்பு
பொதுவாக வி.கே.டி., சாலையில் வரும் வாகனங்கள், வடலுாரில் இருந்து அணைக்கரை கொள்ளிடம் பாலங்களில் நிறுத்தப்படும். பிரிட்டிஷ் காலத்து பாலங்கள் என்பதால், அதன் ஸ்திரத்தன்மையை பொறுத்து, ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும். இதனால், பெரும்பாலான வாகனங்கள், விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் மார்க்கமாக த.பழூர் மார்க்கத்தில், கும்பகோணம் புறவழிச்சாலைக்கு செல்கின்றன.
வரும் காலங்களில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் மார்க்கமாக நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால், அணைக்கரை பாலத்தை கடக்கும் அவசியம் ஏற்படாது.
கடலுார் - அரியலுார் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் நான்கு வழிச்சாலையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருவதால், இருமாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.