/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'கிக் பாக்சிங்' கில் உலக அளவில் சாதிக்க துடிக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவி
/
'கிக் பாக்சிங்' கில் உலக அளவில் சாதிக்க துடிக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவி
'கிக் பாக்சிங்' கில் உலக அளவில் சாதிக்க துடிக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவி
'கிக் பாக்சிங்' கில் உலக அளவில் சாதிக்க துடிக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவி
ADDED : ஜூலை 25, 2024 05:55 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான சுரேஷ் என்பவர் மகள் சுபாஷினி, 18; சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இளைநிலை விளையாட்டு படிப்பில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
சிறு வயதிலேயே கராத்தே மற்றும் கிக் பாக்சிங்கில் ஆர்வம் ஏற்பட்டு, பயிற்சி பெற்றார். ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள டிரீம் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றார்.
கராத்தே பயிற்சியாளர் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் சத்யராஜ், சீர்காழி யாமினி, அழகு மலர் ஆகியோரிடம் பயிற்சி பெற்று திறமையை வளர்த்துக்கொண்டார்.
அதன் மூலம், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றார்.
நகரில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள், மற்றும் சமூக அமைப்புகளின் உதவியோடு மாநில மற்றும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
2018ம் ஆண்டு கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் பெற்றார். கல்வித்துறை சார்பாக 2019 திருப்பூரிலும், 2020 தர்மபுரியிலும் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
2022ல் கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் தங்கம் வென்றார். 2023ல் ராஞ்சியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றார். கடந்த பிப்ரவரியில் டில்லியில் நடந்த சர்வதேச போட்டியில் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம். 2024 சிலிகுரியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
சுபாஷினியின் தொடர் வெற்றியை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் மாதம் ஹங்கேரியில் நடக்கும் கிக் பாக்சிங் உலக கோப்பை போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், இப்போட்டியில் பங்கேற்க நிதியின்றி தவித்து வருகிறார். தமிழக அரசு இந்த ஏழை மாணவி சுபாஷினி சாதனை படைக்க, நிதியுதவி செய்தால் கிக் பாக்சிங் போட்டியில் உலக கோப்பை வென்று நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என்கிறார்.