/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறு சைக்கிளுடன் வழி தவறிய சிறுவன் மீட்பு
/
சிறு சைக்கிளுடன் வழி தவறிய சிறுவன் மீட்பு
ADDED : ஜூன் 04, 2025 09:34 PM

குள்ளஞ்சாவடி; சிறிய சைக்கிளுடன் வழி தவறிய சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி பகுதியை சேர்ந்தவர், நீலகண்டன், 36. இவரது மகன் நகுலேஷ், 8. குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருபவர். சிறுவன் நகுலேஷ் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றபோது தனது அடையாள அட்டையை தவற விட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தனது தந்தை தன்னை திட்டாமல் இருப்பதற்காக அடையாள அட்டையை தேடி சிறுவன் நகுலேஷ் தனது சைக்கிளில் பள்ளிக்கு கிளம்பி உள்ளான். கண்ணாடியில் இருந்து தனது சிறிய சைக்கிளிலேயே கடலூர் மெயின் ரோடு வந்த சிறுவன், 12 கி.மீ., துாரம் கடந்து, குள்ளஞ்சாவடி சந்திப்பு அருகே உள்ள முருகன் கோவில் வரை சென்றுள்ளான்.
திடீரென சைக்கிள் செயின் கழன்றதை அடுத்து, வேறொரு சிறுவன் அவனை மீட்டு குள்ளஞ்சாவடி போலீசில் ஒப்படைத்துள்ளான். குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் சிறுவன் நகுலேஷை விசாரித்து அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
இதற்குள் சிறுவன் காணாமல் போனதால் அதிர்ச்சியைடைந்த கண்ணாடி கிராம மக்கள் சிறுவனை கிராம பகுதிகளில் தேடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வழி தவறிய சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த குள்ளஞ்சாவடி போலீசாருக்கு கண்ணாடி மக்கள் நன்றி தெரிவித்தனர்.