/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
/
பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜூன் 04, 2025 08:57 AM

தரைவழி போக்குவரத்து இல்லாத காலத்தில், நீர் வழி போக்குவரத்து மட்டும் இருந்தது. தமிழகத்தில், சென்னையில் இருந்து விழுப்புரம், மரக்காணம், கடலுார் கடற்கரையையொட்டி பரவனாறு மற்றும் வெள்ளாறு வழியாக பரங்கிப்பேட்டை வரை பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை வரை படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனால், பரங்கிப்பேட்டை பகுதி பெரும் வளர்ச்சியடைந்தது. இப்பகுதி மக்கள் அரிசி, பருத்தி, மீன், கருவாடு உள்ளிட்டவைகளை படகில் எடுத்துச் சென்று வணிகம் செய்தனர்.
இயற்கை சீற்றம் காரணமாக கடந்த 1984ம் ஆண்டு முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுனாமி மற்றும் இயற்கை சீற்றங்களின் போது பக்கிங்காம் கால்வாய் சேதமடைந்தது. வெள்ளக் காலங்களில், பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பக்கிங்காம் கால்வாய் வடிகாலாக இருந்தது.
மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் தேங்கியிருக்கும். இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதனால், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, கே.பஞ்சங்குப்பம், தோப்பிருப்பு, கரிக்குப்பம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பயனடைந்து வந்தனர்.
காலப்போக்கில் பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து தற்போது பரப்பளவு சுருங்கி செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், மழை, வெள்ளக் காலங்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் பல கிராமங்களில் தேங்குவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, வரலாற்று சிறப்பு மிக்க பக்கிங்காம் கால்வாயில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரினால் வெள்ளக் காலங்களில் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.