ADDED : மார் 23, 2026 08:09 PM

கடலுார்: சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினி மூலம் பணி ஒதுக்கீடு நேற்று நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியிலும், ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக முதற்கட்ட பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக கணினி அறையில் நடந்த பணி ஒதுக்கீட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்து கூறியதாவது;
மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதியிலும், 2590 ஒட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்களை முதற்கட்ட பயிற்சிக்கு கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
திட்டக்குடி தொகுதிக்கு 1339 பேர், விருத்தாசலம் தொகுதிக்கு 1522, நெய்வேலி 1229, பண்ருட்டி 1482, கடலுார் 1238, குறிஞ்சிப்பாடி 1334, புவனகிரி 1459, சிதம்பரம் 1430, காட்டுமன்னர்கோயில் 1397 பேருக்கு, கணினி மூலம் முதற்கட்ட பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திட்டக்குடி தொகுதிக்கு ஞானகுரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி டவுன்ஷிப் ஜவகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பண்ருட்டி ஜான் டூவி தொடக்க பள்ளி, மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல் நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி பார்வதிபுரம் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, புவனகிரிக்கு குறிஞ்சிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் தொகுதிக்கு அண்ணாமலை பல்கலை கழகம் டெக்பார்க், காட்டுமன்னார் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் திருநாவுக்கரசு உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
