/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் கரையோரம் வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா! பொதுப்பணி துறைக்கு விவசாயிகள் கோரிக்கை
/
வீராணம் கரையோரம் வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா! பொதுப்பணி துறைக்கு விவசாயிகள் கோரிக்கை
வீராணம் கரையோரம் வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா! பொதுப்பணி துறைக்கு விவசாயிகள் கோரிக்கை
வீராணம் கரையோரம் வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா! பொதுப்பணி துறைக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 02:19 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கரையொட்டி, செய்யப்பட்டுள்ள வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மூலம் சுற்றுவட்டா பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. சென்னைக்கு குடிநீர் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், வீராணம் ஏரியில் இருந்த கசியம் தண்ணீரை நம்பி, ஏரிக்கரையோர கிராமங்களான லால்பேட்டை, நத்தமலை, மானியம் ஆடூர், திருச்சின்னபுரம், கொள்ளுமேடு ஆகிய கிராமங்களில் 120 ஏக்கரில், பல்லாண்டுகளாக வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளைவிக்கும் வெற்றிலை சிதம்பரம், கடலுார், சேத்தியாத்தோப்பு, அரியலுார், ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் தேக்கப்படும் தண்ணீர், நெல் வயல்களுக்கு மட்டுமின்றி, அவ்வப்போது வெற்றிலை கொடிக்காலுக்கும் வழங்கப்படும்.
வீராணம் ஏரியின், நத்தமலை சின்ன வாய்க்கால், திருச்சின்னபுரம் வாய்க்கால் மற்றும் ரெட்டை வாய்க்கால் மூலம் வெற்றிலை கொடிக்காலுக்கு தண்ணீர் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வெற்றிலைக்கு தண்ணீர் வழங்காமல் பொதுப்பணி துறையினர் தடை போட்டுள்ளதாக வெற்றிலை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வெற்றிலை சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது என்பதால், வீராணம் ஏரியில் இருந்து, பாசன வாய்க்கால் மூலம் கசியும் தண்ணீர் மூலமே வெற்றிலை கொடிக்காலுக்கு தண்ணீர் பாய்ச்சுவர், அதிக தண்ணீர் தேவைப்படும்போது பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து தண்ணீர் பெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது மதகின், தண்ணீர் கசிவு ஏற்படாத வகையில், பொதுப்பணித்துறை மூட்டைகள் கொண்டு வாய்க்கால் மதகு பகுதியில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் கசிவு இல்லை. மேலும், வெற்றிலை கொடிகாலுக்கு தண்ணீர் வழங்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுப்பதாக கூறப்படுகிறது.
வீராணம் ஏரியொட்டிய கிராமங்களில் ஏற்கனவே 500 ஏக்கர பரபரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது, 120 ஏக்கராக சுருங்கி போனது, இந்நிலையில், வீராணம் பொதுப்பணித்துறை அதிகாரிகள், இதற்கும் தண்ணீர் தர மறுத்தால் வெற்றிலை விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், வெற்றிலை சாகுபடி இப்பகுதியில் முழுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, வெற்றிலை சாகுபடிக்கு போதிய தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.