/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாதனை மாணவர்களை உருவாக்கும் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
/
சாதனை மாணவர்களை உருவாக்கும் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
சாதனை மாணவர்களை உருவாக்கும் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
சாதனை மாணவர்களை உருவாக்கும் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
ADDED : ஜூன் 07, 2025 10:52 PM

பெண்ணாடத்தில் கடந்த 1947 ஜூன் 30ம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. வரும் 30ம் தேதியுடன் 78 ஆண்டுகள் நிறைவு பெற்று, 79ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக ராமமூர்த்தி பணிபுரிந்தார். கடந்த 2023ம் ஆண்டு முதல் ராமச்சந்திரன் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பள்ளியில் 15க்கும் மேற்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், சாரணர் படை, இளம் செஞ்சிலுவை சங்கம், மாணவர் காவல் படை உள்ளிட்ட துணை பிரிவுகள் உள்ளன.
நகர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படிக்கின்றனர். மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளியின் புதிய வளாகத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானம் உள்ளன.
பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல், கல்வித்துறை மற்றும் மத்திய அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் உயர் பதவி வகித்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கற்றல் திறனை ஆசிரியர்கள் மேம்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது,
கற்றல் திறனை மேம்படுத்துவேன்
பள்ளித் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது:
இப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துள்ளேன்.
மாணவர்களுக்கு கல்வியின் பயன்கள் குறித்து பல்வேறு அறிவுரைகளை கூறி நல்ல நிலைக்கு உயர்த்தி வருகிறேன். மற்ற ஆண்டுகளை விட தற்போது தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தியுள்ளேன். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் கல்வித்திறன் உயர்ந்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்த பாடுபடுவேன்.
பள்ளியால் பெருமை அடைகிறேன்
பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் தென்கோவன் கூறியதாவது:
நான் இப்பள்ளியில் கடந்த 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை படித்தேன். உடற்கல்வி துறையில் படித்து, இப்பள்ளியில் 2005ம் ஆண்டு முதல் 2012 வரை பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பள்ளியில் பணிபுரிந்தேன்.
தற்போது, விருத்தாசலம் அடுத்த எருமனுார் அரசுப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். இப்பள்ளியில் படித்து, உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்.
சாதனை பள்ளி
வழக்கறிஞர் சுரேஷ்குமார் கூறியதாவது:
பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது ஆசிரியர்களாகவும், வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசு பணிகளில் உள்ளனர்.
இப்பள்ளியில் கடந்த 1990ம் ஆண்டு முதல், 1999ம் வரை படித்துள்ளேன். தற்போது, திட்டக்குடி கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிகிறேன். இந்த சாதனை பள்ளியில் படித்தது எனக்கு பெருமையாக உள்ளது.
பள்ளி வளர்ச்சிக்கு உதவ தயார்
சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாவரவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்ததை படித்ததை பெருமையாக கொள்கிறேன். பள்ளி பருவத்தில் கட்டடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அது போன்று என்னுடைய படிப்பிற்கு அப்போதைய தலைமை ஆசிரியர்கள் பாலுசாமி, பத்ரு ஆகியோர் உறுதியான தன்னம்பிக்கையை கொடுத்தனர்.
மாணவர்களை நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினார்கள். முதுகலை ஆசிரியராக பணிபுரிய இப்பள்ளியில் பயின்ற அடிப்படைக் கல்விதான் காரணம். ஆசிரியர்கள் அனைவருமே நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினர்.
மேலும், தற்போது பள்ளியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் உதவ தயாராக உள்ளேன்.
சிறப்பாக வழி நடத்தும் ஆசிரியர்கள்
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி கூறியதாவது:
பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன். பள்ளியில் என்.எஸ்.எஸ்., துவங்கியபோது மாணவ தலைவராக இருந்து முதன் முறையாக மேல்இருளம்பட்டில் முகாம் நடத்தினோம்.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ராமலிங்கம் இருந்தார். முகாமிற்கு மாணவர்களை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ராஜசூடாமணி தேர்வு செய்தார்.
அப்போது, முருகேசன், சொக்கலிங்கம் ஆகியோர் தலைமை ஆசிரியர்களாக இருந்து சிறப்பாக மாணவர்களை வழிநடத்தினர்.
ஆசிரியர்கள் இயற்பியல்-பரமசிவம், தாவரவியல்-பாண்டுரங்கன், விலங்கியல்-அப்துல்நபி, தமிழ்-விஜயராகவன், ஆங்கிலம்-ராஜகோபால், கணிதம்- ரங்கநாதன், சமூக அறிவியல்-சம்பத், கணக்குபதிவியல்-கணேசன், அறிவியல்-ராதா உட்பட பல ஆசிரியர்கள் தங்களின் திறமைகளால் மாணவர்களை நல்வழிப்படுத்தி சாதனை மாணவர்களாக மாற்றினர்.
தற்போது தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர்.
தலை சிறந்த பள்ளி
முன்னாள் மாணவர் செம்பேரி ஆறுமுகம் கூறியதாவது:
இப்பள்ளி சிறந்த பள்ளி ஆகும். இதற்கு காரணம் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் அரசு வேலைகளில் பல துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் பாடம் நடத்துகின்றனர்.