/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார் நிலை! வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்
/
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார் நிலை! வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார் நிலை! வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார் நிலை! வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 02, 2025 10:02 PM

பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை - பெரியகொசப்பள்ளம் இரு கிராமங்களுக்கு இடையே வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 1876ல் 200.80 மீ., நீளத்தில் பாசனத்திற்காக அணை கட்டப்பட்டது. வெள்ள காலங்களில் அணையில் தேக்கப்படும் நீரை 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி கரும்பு, நெல், கேழ்வரகு மற்றும் தோட்ட பயிர்களை திட்டக்குடி, விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த கிராம விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும், தெற்கு, வடக்கு புத்தூர், ராஜேந்திரப்பட்டிணம், ஆனந்தகுடி, கொக்கரசம்பேட்டை, குணமங்கலம், திருபுத்துார், மேல்புளியங்குடி, வக்கரமாரி, நகரப்பாடி, சேல்விழி, கலியன்குப்பம், ஸ்ரீ நெடுஞ்சேரி, கானுார், கலிங்கனேரி, பாண்டியன் பெரிய ஏரி, பாண்டியன் சித்தேரி, பூவனேரி, பாளையங்கோட்டை ஏரி என நீர்வளத்துறைக்கு சொந்தமான 18 ஏரிகள் பாசன கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறுகின்றன.
பெலாந்துறை அணைக்கட்டு அருகில் உள்ள பெலாந்துறை, சின்ன கொசப்பள்ளம், பெரிய கொசப்பள்ளம், துறையூர், இருளம்பட்டு, முருகன்குடி, மோசட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட வெள்ளாற்றங்கரையோர கிராமங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவ மழையின்போது இக்கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து குடியிருப்புகள், கால்நடைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கையாக பெலாந்துறை அணைக்கட்டில் மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பது வழக்கம்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட அரசு சார்பில் அறிவுறுத்தப்படும்.
அதன்படி, ஓரிரு மாதங்களில் துவங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வெள்ளத்தடுப்பு பணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் பெலாந்துறை அணைக்கட்டு வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று, மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் வருவாய், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறையினர் ஈடுபட்டனர்.