/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி பரப்பு; மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
அரூரில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி பரப்பு; மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
அரூரில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி பரப்பு; மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
அரூரில் குறைந்து வரும் கரும்பு சாகுபடி பரப்பு; மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 24, 2024 07:16 AM
அரூர் : விலை குறைவால், கரும்பு சாகுபடியை கைவிட்டு, மாற்றுப்பயிர் சாகுபடிக்கு, அரூர் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கப்பட்டதும், ஆலை பரப்பு நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டன. இதனால், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 18,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், கரும்பு சாகுபடி நடந்தது. இந்நிலையில், கரும்புக்கு போதிய விலை கிடைக்காததால், அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில், ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது, கரும்பு டன்னுக்கு, 3,349 ரூபாய் வரை, தரத்தின் அடிப்படையில், விலை கிடைத்து வருகிறது. பருவநிலை மாற்றங்கள், சாகுபடி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், இந்த விலை நிலவரம், நஷ்டத்தை ஏற்படுத்தும் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரும்பு சாகுபடியில், அறுவடைக்கு, 12 மாதங்களுக்கு மேலாகிறது. இதனால், ஓராண்டுக்கு, ஒரு சாகுபடியே மேற்கொள்ள முடியும். உழவு செய்தல், கரும்பு நடவு, களை எடுத்தல், தோகை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு செலவு மற்றும் மாமூல், உரம், பூச்சிமருந்து ஆகியவற்றின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக, கரும்பு விலை உயர்த்தப்படவில்லை. கரும்பு டன்னுக்கு, 1,600 ரூபாய் வரை வெட்டு கூலி கேட்கின்றனர்.இதனால், கரும்பு சாகுபடி மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் பெருந்தொகை கரும்பு வெட்டும் கூலிக்கே, செலவிட வேண்டி உள்ளது. மேலும், இதர கழிவு என்ற பெயரில் கரும்பு பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல் விவசாயிகளை ஊக்கப்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி மற்றும் சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில், ஆண்டு முழுவதும், ஒரே சாகுபடியை மேற்கொண்டு, நஷ்டத்தை தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு, காய்கறி உள்ளிட்ட இதர சாகுபடிகளுக்கு மாறி வருகிறோம். சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கடந்த, 2023 - 24ல், 10,000 ஏக்கர் கரும்பு பதிவு செய்த நிலையில் நடப்பாண்டு, 3,000 ஏக்கராக குறைந்துள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிக்க, மானியம் வழங்குவது, கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துவது மற்றும் வெட்டுக்கூலி, மாமூல் போன்றவற்றை ஆலை நிர்வாகம் ஏற்பதுடன், விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.