/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதிய விலை கிடைக்காததால் மாங்காய்களை அறுவடை செய்யாத விவசாயிகள் கவலை
/
போதிய விலை கிடைக்காததால் மாங்காய்களை அறுவடை செய்யாத விவசாயிகள் கவலை
போதிய விலை கிடைக்காததால் மாங்காய்களை அறுவடை செய்யாத விவசாயிகள் கவலை
போதிய விலை கிடைக்காததால் மாங்காய்களை அறுவடை செய்யாத விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 15, 2025 02:09 AM
அரூர், அரூர் பகுதியில், போதிய விலை கிடைக்காததால், மாங்காய்கள் அறுவடை செய்யப்படாமல் மரங்களில் இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதிகளில் 4,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பெங்களூரா, செந்துாரம், பங்கனப்பள்ளி, அல்போன்சா, பென்னட் அல்போன்சா, மல்கோவா, நீலம், ரூபி என, பல்வேறு மா வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு நல்ல விளைச்சல் இருந்தபோதிலும், போதிய விலை கிடைக்காததால், மாங்காய்கள் அறுவடை செய்யப்படாமல் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து, போடம்பட்டியை சேர்ந்த மா விவசாயி ராஜா கூறியதாவது: போடம்பட்டி, சாமண்டஹள்ளி புதுார், பொன்னாகவுண்டம்பட்டி உள்ளிட்ட மொரப்பூர் சுற்று வட்டாரத்தில், 1,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மா விளைச்சல் நன்றாக இருந்த போதிலும், போதிய விலை கிடைக்கவில்லை. கடந்தாண்டு டன் ஒன்று, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. நடப்பாண்டு, வியாபாரிகளும், காவேரிப்பட்டணம் மற்றும் காரிமங்கலம் பகுதியில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகள், டன் ஒன்று, 5,000 ரூபாய்க்கு கொள்முதல்
செய்கின்றனர்.
இதில் அறுவடை கூலி, போக்கு
வரத்து செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டால், விவசாயிகளுக்கு, டன் ஒன்றிற்கு, 3,000 ரூபாய்தான் கிடைக்கிறது. அதாவது ஒரு கிலோ மாங்காய், 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விலை சரிவால், மொரப்பூர் பகுதியில் மட்டும், 100 டன்னுக்கு மேல் மாங்காய்கள் அறுவடை செய்யப்படாமல் மரங்களில் கிடக்கின்றன. இவ்வளவு குறைவான விலைக்கு விவசாயிகள் மாங்காய்களை விற்பனை செய்த போதிலும், மாங்கூழ் தொழிற்சாலைகள் டோக்கன் வழங்கி, 20 நாட்கள் கழித்தே மாங்காய்களை அறுவடை செய்ய வருகின்றனர்.
உழவு செய்தல், பூச்சி மருந்து, பராமரிப்பு செலவு என, ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போது விற்கும் விலையை கணக்கிட்டால், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனையானால் கட்டுப்படியான விலை கிடைக்கும். எனவே விவசாயிகளின் நலன் கருதி, மாங்காய்க்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி, மா சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு கூறினார்.