/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம்
/
மாட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம்
ADDED : ஜன 17, 2024 11:41 AM
தர்மபுரி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில், நேற்று மாட்டு பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாடு, ஆடு போன்ற கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, சலங்கை கட்டி மாடுகளை கட்டும் கொட்டகையையும் சுத்தம் செய்து, அலங்கரித்து மாடுகளின் நெற்றியில் திருநீர் மற்றும் குங்குமமிட்டு அலங்கரித்தனர். மேலும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறுகளை உள்ளிட்டவற்றை புதிதாக அணிவித்து உழவு பொருட்களை வைத்து வழிபாடு செய்து, மாடுகளுக்கு பொங்கல், வாழைப்பழம் ஆகியவற்றை வழங்கி வழிபட்டனர். விவசாயிகளோடு ஒன்றிணைந்த, கால்நடைகளுக்கான மாட்டு பொங்கல் என்பதால், கிராம பகுதிகளில், மக்கள் அதிகளவில் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
* பாப்பிரெட்டிப்பட்டியில் மாட்டு பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடத்துார் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, தாளநத்தம், நத்தமேடு, வேப்பிலைபட்டி, பையர்நத்தம், மோளையானுார், மஞ்சவாடி, தென்கரைகோட்டை பகுதி விவசாயிகள் கால்நடைகளை போற்றி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, மாடுகளுக்கு பொங்கல் கரும்பு, வாழைப்பழம், ஆகியவற்றை ஊட்டி மகிழ்ந்தனர்.
* அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று, பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மாட்டு பொங்கலை கொண்டாடினர். கால்நடைகளை, தங்கள் குடும்பத்தினருடன் வணங்கினர்.

