ADDED : ஜூன் 11, 2025 02:19 AM
ஒகேனக்கல், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், 400 பரிசல் ஓட்டிகள், 300 மசாஜ் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அதை புதுப்பித்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவின்படி, கடந்த ஒரு மாதத்திற்கு முன், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகளுக்கு அரசு வழங்கிய அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கு, மாவட்ட சுகாதார மருத்துவ இணை இயக்குனர் சாந்தி அறிவுறுத்தலின் படி, நேற்று ஒகேனக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில், முதல்கட்டமாக இலவசமாக முழு உடல் பரிசோதனை நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கனிமொழி தலைமையில், டாக்டர் ஜெயச்சந்திரபாபு அவரது மருத்துவக் குழுவினர்மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதில், கண், காது, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண் மசாஜ் தொழிலாளர்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய், மார்பக புற்று நோய் என, முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த முகாமில் பென்னாகரம் பி.டி.ஓ., மணிவண்ணன், கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.