/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
/
முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்
ADDED : ஜன 26, 2024 10:19 AM
தர்மபுரி: தைப்பூசத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 20ல் புற்றுமண் எடுத்தலும், 21ல் கொடியேற்றமும் நடந்தது. அன்றிரவு சுவாமி ஆட்டுக்கிடா வாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், நாக வாகன உற்சவம் நடந்தது. நேற்று காலை, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இன்று காலை, விநாயகர் தேரோட்டமும், நாளை காலை விழாவின் முக்கிய நிகழ்வான பெண்கள் மட்டும் வடம் பிடித்து, தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு பிச்சாண்டவர் உற்சவம், வேடற்பறி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
இவ்விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர். இதேபோல், தர்மபுரி நெசவாளர் காலனி முருகன் கோவில், அன்னசாகரம் விநாயகர் சுப்ரமணி சுவாமி கோவில் குளியனுார் பாலமுருகன் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில் தைபூசத்தையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி வேலவன்குன்று வேல்முருகன் கோவிலின், 62ம் ஆண்டு தைப்பூச விழா நடந்தது. நேற்று காலை முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் கோவிலில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களின் காவடி ஊர்வலம் மேளதாளத்துடன் நடந்தது. 1,008 சங்கு அபிஷேகமும் பக்தர்களுக்கு அன்னதானமும், திருவிளக்கு பூஜை மாங்கல்ய பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று மோளையானுார், பையர்நத்தம், பொம்மிடி, அண்ணா நகர், கடத்துார் ஆகிய இடங்களில் தைபூச உற்சவம் நடந்தது.
* அரூர் அடுத்த கைலாயபுரம் முருகன் கோவிலில், தைப்பூச விழாவையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதேபோல், அரூர் சந்தைமேடு, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, ஒடசல்பட்டி, மொரப்பூர், கர்த்தாங்குளம், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள, முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

