ADDED : ஜன 27, 2024 05:28 AM
நத்தம் : -நத்தம் அருகே நிலத்தகராறில் தம்பியை கட்டையால் தாக்கி கொலை செய்த அண்ணனை,போலீசார் கைது செய்தனர்.
நத்தம் கோசுகுறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 52. இவரது அண்ணன் ராஜா 55. அண்ணன், தம்பிக்கு இடையே நிலத் தகராறு இருந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி ஜன.23 ல் தனது வயலில் உள்ள மரத்தை வெட்டினார். இதை கண்ட அவரது அண்ணன் ராஜா,மரம் வெட்டுவதில் தனக்கும் பணம் தருமாறு கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, கட்டையால் கிருஷ்ணமூர்த்தியை தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல் கிருஷ்ணமூர்த்தி நேற்று இறந்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரிக்கிறார்.

