/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்
/
ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்
ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்
ஓடையில் கழிவுநீர்; அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு கொடைக்கானல் 7 வார்டில் தொடரும் அவலம்
ADDED : ஜூன் 20, 2025 03:42 AM

கொடைக்கானல்: நன்னீர் ஓடையில் கழிவுநீர், அள்ளாத குப்பையால் சுகாதாரக்கேடு என கொடைக்கானல் நகராட்சி 7வது வார்டில் பிரச்னைகள் அதிகம் உள்ளன.
எம்.ஜி.ஆர்., நகர், மல்லி ரோடு, பர்னியல் ரோடு, கங்கா காம்பவுண்ட், டோபி கானல், சிவனடி ரோடு, தெசா நகர் உள்ளடக்கிய இந்த வார்டில் தெருவிளக்கு எரியாது இருள் சூழ்ந்துள்ளது. சாக்கடை கட்டமைப்பு சேதத்தால் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது . பட்டா இல்லாது மக்கள் பரிதவிக்கின்றனர். பாரபட்சமாக குப்பை அள்ளுவதால் நோய் தொற்று உருவாகிறது . காட்டுமாடுகள் நடமாட்டத்தால் அச்சநிலை ஏற்படுகிறது . தெருநாய் தொல்லையால் தினமும் அவதி,சேதமடைந்த ரோடுகளாலும் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
டாஸ்மாக்கால் அவதி
மோகன், டிரைவர் : தெருவிளக்குகள் சரிவர எரியாத நிலையில் தடுமாறும் நிலை உள்ளது. 25 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட குறுக்கு சந்து வழிகள் சீரமைக்காமல் உள்ளது. வீடுகளில் குப்பையை துாய்மை பணியாளர்கள் சரிவர வாங்குவதில்லை. மாறாக பணம்வசூலிக்கின்றனர். குப்பைத் தொட்டியும் இல்லை. சாக்கடை துார்வாரப்படாமல் உள்ளது. தெருக்கள் புதர் மண்டி உள்ளன. பொது கழிப்பறை வசதியின்றி அவதியுறும் நிலை உள்ளது. கவுன்சிலர் வார்டிற்கு வராத நிலையால் வளர்ச்சி பணிகள் பாதித்துள்ளன. குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
ஆற்றில் இறைச்சி கழிவுகள்
முருகேஷ்வரி, வியாபாரி : குடியிருப்பு அருகில் செல்லும் ஆற்றில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பர்னியல் ரோட்டில் உள்ள பாலத்தால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. வார்டில் வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலரிடம் கேட்கும் நிலையில் நகராட்சியில் நிதியில்லை என்கிறார்.
காட்டு மாடு, தெரு நாய் பிரச்னையால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர். வார்டில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் தேவைக்காக அருகில் உள்ள ஊற்று நீரை பயன்படுத்துகிறோம். மொத்தத்தில் வார்டு குறித்து கவுன்சிலர் கண்டு கொள்வதில்லை. விடுதிகளின் கழிவுநீர், குப்பை நன்னீர் ஓடையில் விடப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசடைகிறது.
காட்டுமாடு வரும் வழிகளில் கேட்
பிரபா ஷாமிலி, கவுன்சிலர், (தி.மு.க.,): ரூ.4 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. பர்னியல் ரோட்டில் பாலம் பணி முழுமை பெறாமல் உள்ளது. இது குறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் புகார் அளித்து பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
தெருவிளக்கு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. தெருவிளக்கு மின் இணைப்புகள் தனியார் பணிகளால் சேதப்படுத்தப்பட்டது தெரிய வந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாக்கடை துாவரும் பணியுடன் கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.
காட்டுமாடு வரும் வழிகளில் கேட் அமைக்க ரூ. 10 லட்சத்தில் பணிகள் 4 இடங்களில் நடக்கிறது. பட்டா இல்லாத வீடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஒடையில் கழிவு நீர், குப்பை கொட்டுவது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் விடுதியினர் தொடர்ந்து கழிவுகளை விடுகின்றனர். வார்டில் உள்ள புதர்கள் அகற்றப்படும்.துாய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமித்து குப்பை எடுக்கப்படும் என்றார்.