/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொய் சொல்கிறார் ஸ்டாலின் அன்புமணி குற்றச்சாட்டு
/
பொய் சொல்கிறார் ஸ்டாலின் அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : செப் 28, 2025 03:13 AM
திண்டுக்கல்:''தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசு மட்டும்தான் எடுக்க வேண்டும் எனபொய்  சொல்லி வருகிறார் ''என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மாநில அரசு நடத்தும்  ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு  தடை கிடையாது என  கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
இதன்பின்னும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசு மட்டும்தான் எடுக்க வேண்டும் என பொய் சொல்லி வருகிறார்.
கர்நாடகா, பீஹார் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா  போன்ற மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சில மாநிலங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இங்கு மட்டும்  நடத்த முடியாது என்று பொய்யை சொல்லுகின்ற முதல்வரை தற்போது தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 1931ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தான் 90 ஆண்டு காலமாக ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.
கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்ற விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர். கல்வி பாதாளத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் 37,500 அரசு பள்ளிக்கூடத்தில் 52 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
12,500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 3ல் 1 சதவீதம் இருக்கின்ற தனியார் பள்ளிகளில் அதிகமானவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். 207 பள்ளிக்கூடத்தை மூடியுள்ளனர்.
4,000 தொடக்கப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். ஒரு லட்சம் வகுப்பறையில் ஆசிரியர்கள் கிடையாது. பள்ளிக்கு நிதி கிடையாது. இதுவா கல்வியில் சிறந்தது. இவ்வாறு கூறினார்.

