/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்
/
குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்
குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்
குரங்கு, தெரு நாய், காட்டுமாடுகளால் அச்சுறுத்தல் பரிதவிப்பில் 'கொடை ' ஒன்றாவது வார்டு மக்கள்
ADDED : ஜன 26, 2024 05:48 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் உயரமான பகுதியில் அமைந்துள்ள நகராட்சி ஒன்றாவது வார்டில் அப்சர்வேட்டரி, பெய்ரி பால்ஸ், செல்லப்புரம், ரிவர்சைடு பகுதிகள் உள்ளன. ரோஜா பூங்கா, வானியியற்பியல் மையம், நகருக்கு குடிநீர் வழங்கும் மனோரத்தினம் சோலை அணை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமும் அமைந்துள்ளது . இங்கு குரங்கு, தெரு நாய் தொல்லை, காட்டுமாடுகளால் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது. துார்வாரப்படாத சாக்கடை, சரிவர எரியாத தெருவிளக்குகள், சேதம் அடைந்த ரோடு, குடிநீர் தேக்கம் அருகே குப்பைகள் , பட்டா இல்லாத அவலம், காட்டேஜ்களால் குடியிருப்புவாசிகள் அவதி, மைதானம் ஆக்கிரமிப்பு, பார்க்கிங் வசதியின்றி நெரிசல் என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. வனச் சுற்றுலா தலம், மேல்மலை பகுதிக்கு செல்லும் மெயின் ரோட்டோரம் அமைந்துள்ள இந்த வார்டில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
ஆக்கிரமிப்பில் திடல்
சசிக்குமார், வணிகம் : அப்சர்வேட்டரி பகுதியில் குண்டாறு குடிநீர் திட்டத்திற்கு பைப் லைன் அமைக்க குழாய்கள் குவித்து 5 ஆண்டுகளாகியும் அகற்றாமல் விஷ ஜந்துக்கள் வசிக்கும் குடியிருப்பாக மாறியுள்ளது. அருகில் குடியிருப்பு, கோயில் உள்ளதால் அச்சுறுத்தலாக உள்ளது. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு திடல் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. தெரு நாய்,குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.
குடிமகன்கள் தொல்லை
முருகன், நில வணிகர் : ரிவர் சைடு தெருவில் குடிமகன்கள் தொல்லை அதிகரித்து இவர்கள் விட்டு செல்லும் உணவு, மதுபாட்டிலால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. எப்போதும் காட்டு மாடு நடமாட்டம் இருப்பதால் அச்சுறுத்துலுடன் நடமாடும் நிலை உள்ளது. 10 ஆண்டுகளாக ரிவர்சைடு பகுதியில் ரோடு சீரமைக்காமலும், சாக்கடை வசதியின்றி உள்ளது. பெய்ரி பால்ஸ் ரோடு சீரமைக்காமல் வாகன ஓட்டிகள், மாணவர்கள் தடுமாறும் நிலை உள்ளது, செல்லப்புரம் பகுதி குடிநீர் வரும் பாதையில் குப்பை அள்ளாமல் குடிநீர் மாசடைந்து வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
சரவணன், விவசாயம் : ரோஜா பூங்கா பகுதியில் நெடுஞ்சாலை பகுதியை ஆக்கிரமித்து ஏராளமான ரோட்டோர கடைகள் வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வார விடுமுறை ,சீசன் தருணங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை,பொது போக்குவரத்து வெகுவாக பாதிக்கிறது. ரோஜா பூங்கா பகுதியில் கார் பார்க்கிங் வசதி இருந்தும் மெயின் ரோட்டோரம் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். தாழ்வாகன பகுதியில் இருந்து அடிவாரம் வரை முறையான மழை நீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் .
குப்பை அகற்றப்படும்
கலாவதி, கவுன்சிலர் (தி.மு.க.): ரூ. ஒன்றை கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
காட்டுமாடுகளை கட்டுப்படுத்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் எம்.எல்.ஏ., மூலம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாய்களை கட்டுப்படுத்த ப்ளூ கிராஸ் எதிர்ப்பு தெரிவிப்பதால் தாமதம் ஆகிறது. பெய்ரிபால்ஸ் ரோடு பணிகள் சில வாரங்களில் துவங்கும்.
ரோஜா பூங்கா பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனுமதி பெறாத காட்டேஜ் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பு சீர் செய்யப்படும். புதிய தெருவிளக்குகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குடி நீர்நிலை பகுதியில் உள்ள குப்பை அகற்றப்படும் என்றார்.

