/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே
/
போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே
போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே
போதிய மழை இல்லாததால் குளங்களுக்கு இல்லை நீர் வரத்து காவிரி ஆற்றுநீரை குளங்களில் நிரப்ப வழி காணலாமே
ADDED : ஜன 26, 2024 06:00 AM

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் போதிய மழை இல்லாத நிலையில் எந்த குளத்திற்கும் தண்ணீர் வரவில்லை. இதனால் காவிரி தண்ணீரை குழாய்கள் வழியாக கொண்டு வந்து குளங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் வடகோடியில் உள்ளது குஜிலியம்பாறை ஒன்றியம். காடுகளும், பாறைகளும் மட்டுமே நிறைந்த இப்பகுதியில் வானம் பார்த்த பூமியாகவே பெரும்பாலான நிலங்கள் உள்ளன. , மானாவாரி விவசாயத்தையே இப்பகுதி மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ளனர். சென்னை , திருநெல்வேலி என தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் போதிய மழை இல்லை.
இதனால் இந்த பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அறவே இல்லை. இதனால் இன்னும் சில மாதங்களில் இங்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
வறட்சியை கருத்தில் கொண்டு குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் உள்ள குளங்களுக்கு காவிரி நீரை கொண்டு வந்து நிரப்பினால் சுற்றுப் பகுதியில் உள்ள போர்வெல்களில் ஓரளவுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் , மனிதர்கள் மட்டுமின்றி ஆடு ,மாடுகளுக்கும் போதிய குடிநீர் கிடைக்கும் . சட்டசபை தேர்தலின் போது வடமதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் காவிரி நீரை கொண்டு வந்து குளங்களை நிரப்புவோம் என்று உறுதி அளித்தார்.அதன்படி தி.மு.க., ஆட்சிக்கும் வந்து மூன்று ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் காவிரி தண்ணீரை கொண்டு குளங்களை நிரப்புவது குறித்து ஆய்வு செய்ய ரூ.ஒரு கோடி ஒதுக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது எழுந்துள்ள கடும் வறட்சியை கருத்தில் கொண்டு காவிரி தண்ணீரை குளங்களுக்கு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
நீண்ட கால கோரிக்கை
எல். தங்கவேல், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர், குஜிலியம்பாறை: மாவட்டத்திலே குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி வறட்சி பாதித்த பகுதியாகும். நடப்பு பருவத்தில் போதிய மழை இல்லாததால் எந்த குளங்களுக்கும் தண்ணீர் வரவில்லை.
இதனால் தான் விவசாயிகள் சங்கம் சார்பில் காவிரி நீரை கொண்டு வந்து குளங்களை நிரப்ப வேண்டும் என கோரி வருகிறோம். வேடசந்துார் தாலுகா பகுதி மக்களின் நலன் கருதி வேடசந்துார் சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் காவிரி நீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும் .
வாழ்விற்கு வழி பிறக்கும்
ஆர்.பூபதி, சமூக ஆர்வலர், செங்குளத்துப்பட்டி, ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி: சில ஆண்டுகளாகவே குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் போதிய பருவ மழை இல்லை. செங்குளத்துப்பட்டியில் உள்ள குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் 2024 ல் விவசாயிகள் போதிய நீரின்றி விவசாயம் செய்ய முடியாமலும் கால்நடைகளை முறையாக பராமரிக்க முடியாமலும் அவதிக்கு ஆளாகும் நிலை நேரிடும். இதை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளங்களை நிரப்ப வேண்டும். அப்போதுதான் வரும் காலத்தில் விவசாயம் செழிக்கும். கால்நடைகள் வளர்ச்சி கிடைக்கும். மக்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
ஆய்வு மேற்கொள்ளுங்க
ஜி.ஆர்.ராஜகோபால், குடகனாறு வலது பிரதான கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர், திருக்கூர்ணம் : காவிரியில் கூடுதலான நீர் வரும்போது எல்லாம் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தான் வேடசந்துார் தாலுகா பகுதி குளங்களுக்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்கிறோம். இதற்காகத்தான் தற்போதைய தி.மு.க., ஆட்சியில், பைப் லைன் மூலம் குளங்களுக்கான தண்ணீரை நிரப்பும் ஆய்வு பணியை மேற்கொள்ள ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். ஆய்வு பணியை விரைந்து முடித்து அனைத்து குளங்களையும் காவிரி நீரால் நிரப்ப வேண்டும்.

