/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி-பெருந்துறை இடையே 'ரூட்' பஸ் இல்லாமல் அவதி
/
கோபி-பெருந்துறை இடையே 'ரூட்' பஸ் இல்லாமல் அவதி
ADDED : ஜன 17, 2024 10:49 AM
கோபி: கோபி-பெருந்துறைக்கு, அரசு மப்சல் பஸ் வசதியில்லாததால், 7 நம்பர் டவுன் பஸ்சில், ஒன்றேகால் மணி நேரம் பயணித்து, பயணிகள் அவதியுறுகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் ஏராளமான பனியன் கம்பெனிகள், சிப்காட் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது.
இதனால், கோபியில் இருந்து ஏராளமானோர் வேலைக்கும், பள்ளி, கல்லுாரிகளுக்கும் பெருந்துறை செல்கின்றனர். இதேபோல், பெருந்துறையில் இருந்து கோபிக்கு தினமும் பல்வேறு வேலை நிமர்த்தமாகவும், படிப்பு சார்ந்த தேவைக்காக மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர்.
கோபியில் இருந்து பெருந்துறைக்கு, இரு மார்க்கத்துக்கும் தினமும், 7, 7ஏ, 7பி, 7சி, 7டி போன்ற அரசு டவுன் பஸ்களும், எல்.எஸ்.எஸ்., பஸ்களும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள், கொளப்பலுார், சிறுவலுார், திங்களூர், சீனாபுரம் வழியாக தினமும், 50 முறை கோபிக்கும், பெருந்துறைக்கும் இயக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகம், ஜீவா போக்குவரத்து கழகமாக இருந்தபோது, 'செமி மப்ஷல் பஸ்' என்ற பெயரில் பஸ் இயக்கப்பட்டு, சில ஆண்டுகளில் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அந்தியூரில் இருந்து, கோபி, பெருந்துறை வழியாக தினமும் காலை, 7:00 மணிக்கு மதுரைக்கு ஒரு மப்சல் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், அது தொலைதுாரம் பயணிக்கும் பஸ் என்பதால், காங்கேயம், தாராபுரம் பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். கோபியில் இருந்து பெருந்துறைக்கு மப்சல் பஸ் இயக்காததால், பயணிகள் 1.15 மணி நேரம் டவுன் பஸ்சில் பயணித்து அவதியுறுகின்றனர்.
இந்த சூழலில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம் அறிமுகமானதால், 7ம் நம்பர் டவுன் பஸ்சில், இருக்கைக்கான இடம் பிடிப்பது இயலாத காரியமாக உள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் முன்பே, பயணிகள் ஜன்னல் வழியாக இடம் பிடிக்க ஓடிச்சென்று முண்டியடிப்பதில் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,' கோபியில் குறைந்த டிரைவர், கண்டக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஒரு கி.மீ.,க்கு 48 ரூபாய் வரை செலவாகிறது. அந்த மார்க்கத்தில், அந்தளவுக்கு வருவாய் கிடைக்குமா என அதிகாரிகள் தணிக்கை செய்து, மப்சல் பஸ் இயக்க செயல் வடிவம் தரலாம். உயரதிகாரிகள் ஆராய்ந்து முடிவு செய்தால், மப்சல் பஸ் பிரச்னைக்கு மார்க்கம் கிடைக்கும்' என்றனர்.

