ADDED : ஜன 08, 2025 02:49 AM
பாய்லர் ஆப்பரேட்டர் வேன் மோதி பலி
காங்கேயம்,:நத்தக்காடையூர் அருகே பைக் மீது ஆம்னி வேன் மோதியதில், சிப்காட் தொழிலாளி பலியானார்.
திருப்பூர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன், 27; பெருந்துறை சிப்காட்டில் பாய்லர் ஆப்பரேட்டராக வேலை செய்தார். இவரின் உறவினர் சக்தி, ௪௦; இருவரும் நேற்று முன்தினம் இரவு, நத்தக்கடையூருக்கு டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்றனர்.
நத்தக்கடையூர் நால்ரோடு சூர்யாநகர் அருகில் எதிரே வந்த ஆம்னி வேன், பைக் மீது மோதியது. பலத்த காயமடைந்த தமிழரசன், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருட முயற்சி சுவர் ஏறி குதித்த ஆசாமி சிக்கினார்
ஈரோடு, : ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது.
இங்கு இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் அறைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர் பிரிவு, வட்ட வழங்கல் அலுவலகம் செயல்படுகிறது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் மர்ம நபர் ஒருவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைந்து, அங்குள்ள காப்பர் ஒயர்களை திருட முயன்று உள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவை உடைக்க முயன்றுள்ளார். முடியாததால் ஒயரை மட்டும் துண்டித்துள்ளார்.
நேற்று காலை ஊழியர்கள் வந்தபோது மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஊழியர்களை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவரை மடக்கி பிடித்தனர். ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த 'சிசிடிவி' கேமராவில், ஒவ்வொரு அறையாக அவர் சென்றதும், கேமராவை உடைக்க முயல்வதும் தெரியவந்தது. விசாரணையில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ராஜா, 29, என்பது தெரிந்தது. திருமண விழாக்களில் வேலை செய்வதாகவும், பிளாட்பார்மில் இருந்து கொண்டு பிழைப்பு நடத்தி வருவதும் தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.