ADDED : ஜன 27, 2024 04:21 AM
நிலாச்சோறு விழா
கோபி: கோபி அருகே ஓடத்துறை கிராமம், ஓ.நஞ்சகவுண்டன்பாளையத்தில், வில்வ விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவிலில், ஏழாவது ஆண்டு விழாவையொட்டி, அப்பகுதி சிறுமியர் முதல் பெண்கள் வரை, நேற்று முன்தினம் நள்ளிரவில், நிலாச்சோறு வழிபாட்டில் ஈடுபட்டனர். விசிறி பூக்களுடன் மாவிளக்கு தட்டுகளை நடுவில் வைத்து, மழை பெய்யவும், விவசாயம் பெருகவும், நிலவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், கும்மியடித்து நிலாச்சோறு வழிபாடு செய்தனர். அதிகாலை வரை கும்மியடித்தனர். அதன்பின் நிலவுக்கு பூஜை செய்து, வாழை தண்டினால் அலங்கரிக்கப்பட்ட தேரை ஓடத்துறை குளத்தில் விட்டனர்.
வரட்டுப்பள்ளம்
அணை திறப்பு
அந்தியூர்: பர்கூர்மலை அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, நாளை முதல் ஜன., 11ம் தேதி வரை, 15 நாட்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்த வகையில் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகளுக்கு, 28.94 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.
பேனரை அகற்றக்கோரி
போராடியோர் கைது
சென்னிமலை: சென்னிமலை நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்களை அகற்றக்கோரியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்தாததை கண்டித்தும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையிலான ஐந்து பேர், சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னிமலை போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, காமராஜ் நகர் சமுதாயக் கூடத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர். பிளக்ஸ் பேனர் வைத்துள்ள நபர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைவில் அகற்றவும், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விஜயகாந்த்துக்கு
மோட்ச தீபம்
தாராபுரம்: தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் மறைந்து, 30 நாளான நிலையில், அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தாராபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதன்படி அமராவதி ஆற்றங்கரையில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்வில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் தே.மு.தி.க., மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, துணை செயலாளர் கந்தசாமி, நகர நிர்வாகிகள் ஜோசப், முனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தைப்பூச திருவிழாவில்
திருக்கல்யாண உற்சவம்
கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா, மகன்யாச அபிேஷகத்துடன், நேற்று முன்தினம் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மூலவர் சண்முக சுப்ரமணியருக்கு அபிஷேகம், சிவப்பு சாற்றி அலங்காரம் நடந்தது.

