ADDED : ஜூன் 29, 2024 02:10 AM
பாலமலையில் காய்ச்சிய
சாராயம் பறிமுதல்
பவானி: அம்மாபேட்டை எஸ்.ஐ., பெரியசாமி தலைமையிலான போலீசார். கண்ணப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்து மேற்கொண்டனர். பி.கே.புதுார் பாலமலை அடிவாரத்தில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். சேலம் மாவட்டம் பாலமலை, நமன்காட்டை சேர்ந்த தர்மலிங்கம், 46, என்பதும், பாலமலையில் சாராயம் காய்ச்சி, பாக்கெட்டுகளாக கொண்டு வந்து பாலமலை அடிவாரத்தில், விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 450 மி.லி., கொண்ட, 14 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ரூ.22.22 லட்சத்துக்கு எள், மக்காசோளம் விற்பனை
ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 241 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 115.99 ரூபாய் முதல், 140.99 ரூபாய்; சிவப்பு ரகம், 115.09 ரூபாய் முதல், 143.90 ரூபாய் வரை, 17,880 கிலோ எடை எள், 21.௭௩ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அதுபோல, 20 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட மக்காசோளம், ஒரு கிலோ, 25.70 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. 1,917 கிலோ மக்காசோளம், 49,267 ரூபாய்க்கு விலை போனது.
ரூ.1.72 லட்சத்துக்குகொப்பரை ஏலம்
ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 59 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 92.89 ரூபாய் முதல், 94.20 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 60.60 ரூபாய் முதல், 85.19 ரூபாய் வரை, 1,923 கிலோ கொப்பரை, 1.௭௨ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
பள்ளி பஸ் மோதி
இளைஞர்கள் காயம்
பவானி, ஜூன் 29-
பூனாச்சி, கொண்டையன்கொட்டாயை சேர்ந்தவர்கள் தினேஷ், 18; ரட்சித், 18; பூபதி, 18; மூவரும் பிளஸ் 2 முடித்துள்ளனர். கோயம்புத்துாரில் ஒரு கல்லுாரியில் சேர விண்ணப்பிக்க, ஒரே டூவீலரில் நேற்று காலை புறப்பட்டனர். பூனாச்சி அருகே கல்லுக்கடை என்ற இடத்தில் சென்றபோது, சித்தாரில் இருந்து அந்தியூர் நோக்கி வந்த, தனியார் பள்ளி பஸ் மோதியது. இதில் மூவரும் காயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த தினேஷ், மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற இருவரும் அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்குகுழு அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில் கிளை தலைவர் பெரியசாமி தலைமையில், ஈரோடு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டல செயலாளர் ஜோதிமணி, கிளை செயலாளர் ஸ்ரீதேவி, கோட்ட செயலாளர் விஸ்வநாதன் கோரிக்கை குறித்து பேசினர்.
மின்வாரியத்தில், 70,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு தவணைத்தொகை வழங்க வேண்டும். அரசு ஊழியர் பெறுகின்ற குடும்ப நல நிதி, 5 லட்சத்தை மின்வாரியத்திலும் அமலாக்க வேண்டும். கடந்த, 2023 டிச., 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பவானி நகராட்சியில்
31 தீர்மானம் 'ஓ.கே.,'
பவானி, ஜூன் 29-
பவானி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சிந்துாரி தலைமை வகித்தார். கமிஷனர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். தேவபுரம் மயான வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அம்ரூத் 2.0 திட்டத்தில் குடிநீர் பகிர்மான குழாய் பதித்தல், பழனிபுரத்தில் சிறு பாலங்கள் அமைத்தல், அந்தியூர் ரோடு, சோமசுந்தரம் வீதியில் உப்புநீர் குழாய் நீட்டிப்பு செய்தல் உள்பட, 31 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
கைத்தறி தொழிலாளி
கார் மோதியதில் பலி
காங்கேயம்,: திருப்பூர், பெருமாநல்லுார் ரோடு, பசுமை நகரை சேர்ந்த கைத்தறி தொழிலாளி கோவிந்தராஜ், 64; மனைவி ராதாமணி, 61; சுள்ளிபாளையம் கோவிலுக்கு ஹீரோ மேஸ்ட்ரோ பைக்கில் இருவரும் நேற்று முன்தினம் மாலை சென்றனர். என்.காஞ்சிபுரம் அருகே பின்னால் வந்த ஹோண்டா ஜாஸ் கார், அதிவேகமாக பைக் மீது மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோவிந்தராஜ் இறந்தார். ராதாமணி
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மும்முனை மின்சாரம்
கோரி ஆர்ப்பாட்டம்
காங்கேயம்: விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கேட்டு, காங்கேயம் அருகே நத்தக்காடையூர், பழையகோட்டையில் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நத்தக்காடையூர் பகுதி செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் பாதுகாத்திட வேண்டி, நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை பகுதிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். நிறைவில் பழையகோட்டை துணை மின் நிலைய உதவி இயக்குனர் வேலாயுத்திடம் மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.