ADDED : ஜன 28, 2024 10:32 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் நேற்று, நீர் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் அதிக வனப்பகுதி உள்ளதுடன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப்பகுதியும் அமைந்துள்ளது. இப்பகுதியில் தமிழ்நாடு நீர் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றும், இன்றும் நடக்கிறது.
இதுபற்றி, ஈரோடு மாவட்ட வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும் நேற்றும், இன்றும் நீர் நிலப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனுார் என, 3 வனக்கோட்டங்கள் உள்ளன. இங்கு, 19 நீர் நிலப்பரப்பு இடங்கள் உள்ளன.
இதில் ஈரோடு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை என, 5 வனச்சரகம் உள்ளன. இப்பகுதியில் உள்ள உள்ள நீர் நிலப்பரப்பான வெள்ளோடு பறவைகள் சரணாலய பகுதி, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஈரோடு மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் பிரபு தலைமையில் வனத்துறையினர், கல்லுாரி மாணவர்கள், என்.ஜி.ஓ.,க்களை
சேர்ந்தவர்கள், பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் என, 140 பேர் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்ணில் தெரியும் பறவைகள், அவற்றின் இனங்கள், சத்தம், மொத்தமாக உள்ள பகுதிகளை வைத்து அவற்றை கணக்கெடுப்போம்.
வெள்ளோடு சரணாலயம், கனகபுரம் ஏரி போன்ற இடங்களில் நிரந்தரமாக காணப்படும் பாம்புதாரா, சிறிய மற்றும் பெரிய நீர் காகம் உள்ளிட்ட பறவைகள், பிற இடங்களில் இருந்து வந்து செல்லும் நெருங்கால் உள்ளான், ஊசிவால் வாத்து போன்ற ஏராளமான பறவைகளையும் கணக்கெடுக்கிறோம்.
இப்பணிகள், 2 நாளில் நிறைவடையும். இதன் மூலம், அவற்றின் வருகை, அவை வாழ்வதற்கான சூழல் எவ்வாறு அமைந்துள்ளது, புதிதாக வரும் பறவைகள், அரிய பறவைகள் போன்றவற்றை
கண்டறிய முடிகிறது.
இவ்வாறு கூறினார்.