/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
211 நிவாரண மையங்கள், 1,168 மீட்பு உபகரணங்கள்... தயார்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடு
/
211 நிவாரண மையங்கள், 1,168 மீட்பு உபகரணங்கள்... தயார்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடு
211 நிவாரண மையங்கள், 1,168 மீட்பு உபகரணங்கள்... தயார்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடு
211 நிவாரண மையங்கள், 1,168 மீட்பு உபகரணங்கள்... தயார்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடு
ADDED : செப் 29, 2025 01:00 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, 211 நிவாரண மையங்கள், 1168 மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார். கடந்த 2024ம் ஆண்டு நவ., மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது, ஏற்பட்ட பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பல்வேறு பகுதிகளில் வீடுகள் சரிந்து விழுந்ததுடன், கால்நடைகள் உயிரிழந்தது. நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது;
மாவட்டத்தில் நீர்ப்பாசன பகுதிகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க கால்வாய் கரையினை பலப்படுத்த, போதுமான அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மழை பாதிப்புகள் குறித்து தகவலை முன்கூட்டியே தெரிவித்து, பொதுமக்களை நிவாரண முகாமில் தங்க வைக்கவும், முகாம்களில் உணவு, குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று பரவாமல் இருக்க குடிநீரை குளோரினேசன் செய்தல், கொசு மருந்து அடித்தல், அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைத்தல், மின் கம்பங்களை சரிசெய்வதுடன், போதுமான அளவு மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை இருப்பில் வைத்து, தடையின்றி மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை, வேளாண்மை, வருவாய் துறை அலுவலர்கள் தங்களது பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக 04151 - 228801 என்ற பேரிடர் மேலாண்மை பிரிவு எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.
நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஜே.சி.பி., இயந்திரம், அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள், மரம் அறுக்கும் இயந்திரம், பிளிச்சிங் பவுடர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும், சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை கணக்கிட 7 தாலுகாக்களில், 24 இடங்களில் நிரந்தர மழை மானிகளும், 33 இடங்களில் புதிய தானியங்கி மழை மானிகளும், 1 புதிய தானியங்கி வானிலை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களாக 4 பகுதியும், குறைந்த அளவு பாதிப்பு ஏற்படும் இடங்களாக 8 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் பொதுமக்களை தங்க வைக்க 145 பள்ளிகள், 56 மண்டபங்கள், 2 கல்லுாரிகள், 8 சமுதாய கூடங்கள் என மொத்தமாக 211 நிவாரண மையங்களும், 93 இடங்களில் சமையல் கூடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள 1,202 அறைகளில் சுமார் 40,885 நபர்கள் தங்க முடியும்.
மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மரம் அறுக்கும் இயந்திரம், டிராக்டர், ஜே.சி.பி., டிப்பர் லாரி, ஆம்புலன்ஸ் என 1,168 மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் மீட்பு உபகரணங்களும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் 1,643 முன்கள பணியாளர்கள், 768 நீச்சல் வீரர்கள், 129 பாம்பு பிடி வீரர்கள், 110 மழைநீர் வெளியேற்றும் பம்ப் உரிமையாளர்கள், 380 ஜே.சி.பி., உரிமையாளர்கள், 899 லாரி, டிரக் வாகன உரிமையாளர்கள் என மொத்தமாக 4,481 பணியாளர்கள் உள்ளனர்.
வருவாய்த்துறை மற்றும் போலீஸ் இணைந்து பணியாற்ற மண்டல அளவில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதுடன், ஒருங்கிணைந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.

