/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 19, 2024 07:26 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். கவுர தலைவர் ரவீந்திரன், ஆலோசகர் பாண்டியன், துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்டன உரையாற்றினார்.
இதில், ஓட்டுநர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் 'ஹிட் அண்ட் ரன்' புதிய சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சாலை விதிகள் மற்றும் விபத்துகளை தவிர்க்க அதிகளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தின் மூலம் சாலை விதிகள் குறித்து குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்க வேண்டும். லோடு ஏற்றும் மற்றும் இறக்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு உணவு, தேநீர், சுகாதாரமான கழிவறை, குளியல் அறை, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அந்தந்த நிறுவனங்களே ஏற்படுத்தி தர வேண்டும். ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

