/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
யாரை நிறுத்தினாலும் வெற்றி கணிப்பில் தி.மு.க., கள்ளக்குறிச்சியில் களம் இறங்கும் கட்சிகள்
/
யாரை நிறுத்தினாலும் வெற்றி கணிப்பில் தி.மு.க., கள்ளக்குறிச்சியில் களம் இறங்கும் கட்சிகள்
யாரை நிறுத்தினாலும் வெற்றி கணிப்பில் தி.மு.க., கள்ளக்குறிச்சியில் களம் இறங்கும் கட்சிகள்
யாரை நிறுத்தினாலும் வெற்றி கணிப்பில் தி.மு.க., கள்ளக்குறிச்சியில் களம் இறங்கும் கட்சிகள்
ADDED : பிப் 06, 2024 05:47 AM
லோக்சபா தேர்தலுக்கு தமிழக அரசியலில் கூட்டணி முழுமை பெறாத நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., அணியில் ஐ.ஜே.கே., என மூன்று கட்சிகள் போட்டிக்கு தயாராகி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாடு, தேர்தல் அறிக்கை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தற்போது தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., - வி.சி., - கம்யூ., என ஓரளவிற்கு அதே கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அ.தி.மு.க.,வின் நிலைதான் இதுவரை என்னவென்று தெரியவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்ட நிலையில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பா.ஜ., தலைமையில் பலம் வாய்ந்த மற்றொரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதில் ஐ.ஜே.கே., முதலாவதாக கூட்டணியை உறுதி செய்திருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியில் ஐ.ஜே.கே. போட்டியிடும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே பெரம்பலுார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அவரது சொந்த தொகுதியாக இருக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியில் களம் காண்பார் என்ற தகவலும் அக்கட்சியின் நிர்வாகிகளால் உறுதியாக பரப்பப்பட்டு வருகிறது.
பா.ஜ., வுடன் இணைந்திருப்பதால் பணபலம் மட்டுமல்லாது, அதிகார பலத்துடன் தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதி நமக்கு கை கொடுக்கும் என எண்ணுகின்றனர் ஐ.ஜே.கே.,வினர். இப்போதே ஒவ்வொரு பூத்திற்கும் ஆட்களை நியமித்து தேர்தல் பணியை துவக்கி விட்டனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கவுதம சிகாமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷைக் காட்டிலும் 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் காரணமாக வரும் தேர்தலில் தி.மு.க., வில் யாரை நிறுத்தினாலும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற கணிப்பில் கட்சி தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை எதிர் கட்சித் தலைவர் பழனிசாமியின் மாவட்டத்திற்குட்பட்ட ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளும் இதில் இடம்பெறுகிறது.
இந்த மூன்று தொகுதிகளும் தற்போது அ.தி.மு.க., வசம் உள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டசபை தொகுதிகளில் கள்ளக்குறிச்சியை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.
இதன் காரணமாக இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற முழு நம்பிக்கையில் கூட்டணி உறுதிப்படுத்தப்படாத நிலையில் நேரடியாக அ.தி.மு.க., வேட்பாளரை களம் இறக்க பழனிசாமி திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் தொடங்கி இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பிரதான திராவிட கட்சிகளுடன் பா.ஜ., கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே., வும் சம பலத்துடன் களமிறங்க இருப்பதால் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டி களம் அனல் பறக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.