/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... திட்டம்; சுழற்சி முறையில் சோதனைகள் செய்ய போலீஸ் முடிவு
/
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... திட்டம்; சுழற்சி முறையில் சோதனைகள் செய்ய போலீஸ் முடிவு
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... திட்டம்; சுழற்சி முறையில் சோதனைகள் செய்ய போலீஸ் முடிவு
கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த... திட்டம்; சுழற்சி முறையில் சோதனைகள் செய்ய போலீஸ் முடிவு
ADDED : செப் 30, 2025 06:33 AM

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் சாராயம், கஞ்சா விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் பொருட்டு மதுவிலக்கு போலீசார் கரியாலுாரிலேயே தங்கி சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்ள உள்ளனர். கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலையின் அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மான்கொம்பு, மேகம், பெரியார், கவியம் மற்றும் பண்ணியப்பாடி நீர்வீழ்ச்சிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கல்வராயன்மலைக்கு வந்து செல்வதற்காக படகு சவாரி, தொங்கு பாலம் ஆகியவை அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டது.
கல்வராயன்மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயம், கால்நடை வளர்த்தல், கடுக்காய் சேகரித்தல், தேன் வளர்ப்பு, விறகு வெட்டுதல் உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்டனர். பெருகி வரும் விலைவாசியால், மேற்கூறிய தொழில்களில் போதிய வருமானம் கிடைப்பது இல்லை. இதனால், செங்கல் சூளை, தேயிலை பறிப்பு உள்ளிட்ட கூலி வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தவறான வழிகாட்டுதலால் இளைஞர்கள் பலர் ஆந்திராவில் செம்மரம் வெட்டும் பணிக்கு அழைத்து செல்லப்பட்டு, அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கல்வராயன்மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலா, கொய்யா, தேன் ஆகியவற்றை நேரடியாக வாங்கி செல்வது வழக்கம். ஆனால், பூங்கா, படகு சவாரி, தொங்கு பாலம் பராமரிப்பு இன்றி கிடப்பதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் வேலை வாய்ப்புகள் தரும் தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்களும் இல்லாததால், மழைவாழ் மக்களின் வருமானம் கேள்விக்குறியானது.
இதனால், கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பலர் சாராயம் காய்ச்சுதல், கஞ்சா செடி வளர்த்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டனர். அரசியல்வாதிகள் சிலரின் மறைமுக ஆதரவுடன் சாராயம் காய்ச்சி அனைத்து பகுதிக்கும் கடத்தி சென்று, விற்பனை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் கல்வராயன்மலையில் முகாமிட்டு, சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த ஊரல்கள், வெல்லம் மற்றும் தயார் நிலையில் இருந்த கள்ளச்சாராயத்தை கொட்டி அழித்தனர்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுமார் 40 கி.மீ., தொலைவில் உள்ள கல்வராயன்மலையில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு சாராயம், ஊரல் மற்றும் கஞ்சா செடிகளை அழித்து வருகின்றனர். ஆனாலும், ஏதாவது ஒரு இடத்தில் சட்ட விரோத செயல்கள் நடந்து கொண்டே உள்ளது.
கல்வராயன்மலை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நீண்ட தொலைவில் இருப்பதாலும், மலைப்பகுதி என்பதாலும் போலீசாரால் எளிதில் சென்று வர முடிவதில்லை. மேலும், மலை பகுதியில் சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பல்வேறு வழித்தடம் வழியாக சாராயம், கஞ்சா ஆகியவற்றை மலை அடிவாரத்திற்கு கடத்தி செல்கின்றனர்.
எனவே, கல்வராயன்மலை பகுதியில் சாராயம், கஞ்சா உள்ளிட்டவற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசார் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளனர். மாவட்டத்தில் 3 உட்கோட்டங்களில் உள்ள மதுவிலக்கு, அமலாக்க பிரிவு போலீசார் சுழற்சி முறையில் கரியாலுாரில் தங்கி சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தங்கி சோதனை மேற்கொள்ள, கரியாலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே உள்ள கட்டடம் தேர்வு செய்து தயார் செய்து வருகின்றனர்.

