/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை
/
சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 14, 2025 01:54 AM

சங்கராபுரம் : மேலப்பட்டு கிராம பட்டியலின மக்கள் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மஞ்சபுத்துார் மேலப்பட்டு பிரிவு சாலையில் புதிதாக முனியப்பர் சிலை வைத்துள்ளனர். அதற்கு இன்று 14ம் தேதி பொங்கல் வைத்து வழிபாடு நடத்த தீர்மானித்து போலீசிடம் அனுமதி கேட்டனர்.
இதற்கு ஊர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3:00 மணிக்கு வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் பழனியம்மாள் தலைமையில் மேலப்பட்டு கிராம காலனியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.டி.ஓ., முருகன், டி.எஸ்.பி., முத்துமணி, தாசில்தார் வைரக்கண்ணன், இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், கலெக்டரிடம் பேசி முடிவு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று மாலை 6:00 மணிக்கு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.