/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விருகாவூர் கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா..: மழைக்காலத்தில் மக்கள் கடும் அவதி
/
விருகாவூர் கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா..: மழைக்காலத்தில் மக்கள் கடும் அவதி
விருகாவூர் கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா..: மழைக்காலத்தில் மக்கள் கடும் அவதி
விருகாவூர் கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா..: மழைக்காலத்தில் மக்கள் கடும் அவதி
ADDED : மே 12, 2025 02:24 AM

தியாகதுருகம்: விருகாவூர் அருகே கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்காததால் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகி ஆறு, தியாகதுருகம் ஒன்றியத்தின் வழியே செல்கிறது. திருவண்ணாமலை - அடரி சாலையின் குறுக்கே, விருகாவூர் அருகே ஆற்றில் உயரம் குறைவாக அமைக்கப்பட்ட பாலம் உள்ளது.
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், இது கிராம சாலையாக இருந்ததால், பாலத்தின் உயரம் குறைத்து கட்டப்பட்டது.
இந்நிலையில் ஆண்டுதோறும் கனமழை பெய்யும் தருணங்களில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்லும்.
இதனால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படும்.
இது போன்ற தருணங்களில் பொரசக்குறிச்சி, கணங்கூர், எ.சாத்தனூர், எஸ்.ஒகையூர், ஈய்யனூர், அசகளத்தூர் உள்ளிட்ட, 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
போக்குவரத்து துண்டிப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையிலிருந்து திருச்சி செல்லும் முக்கிய சாலையாக இந்த
வழித்தடம் மாற்றப்பட்டது. இதன் காரணமாக திருப்பதி, வேலுார், பெங்களூரு, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிக்கு பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆனாலும், விருகாவூர் அருகே கோமுகி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி இன்னும் கிடப்பில் உள்ளதால், ஆண்டுதோறும் மழை பெய்யும் போது போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
பொதுமக்கள் அவதி
இதனால் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அதனால் அங்கு உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடமாக இச்சாலை மாற்றப்பட்டுள்ளதால் விரைவில் இங்கு உயர் மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

