/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
/
கள்ளக்குறிச்சி நகரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி நகரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி நகரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
ADDED : ஜன 25, 2024 11:43 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக கடந்த 2019ம் ஆண்டு நவ., மாதம் முதல் இயங்கி வருகிறது. மாவட்ட தலைநகரமாக விளங்ககூடிய கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பொழுது போக்கு அம்சத்திற்கு என்று சொல்லும் அளவில் இடம் எதுவும் கிடையாது. அதேபோல், விளையாட்டு திடல் எதுவும் இல்லை.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் மட்டுமே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கிரிக்கெட், இறகு பந்து, வாலிபால், கால்பந்து போன்ற பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்கு வசதியாக இருந்து வருகிறது. பள்ளி கோடை விடுமுறை நாட்களில் மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்த தனியார் விளையாட்டு ஆர்வலர்கள் உரிய அனுமதி பெற்று, பள்ளி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தங்களது உடல் ஆரோக்கியத்திற்காக காலை, மாலை நேரங்களில் இளைஞர்கள், காவலர்கள், முதியோர்கள் என பெரும்பாலானோர் நாள்தோறும் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி, இறகு பந்து உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறை நாளில் பள்ளியின் மைதானத்தில் ஒரு பகுதியில் ஆசாமிகள் ஒரு சிலர் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை வீசி சென்றனர். இதனால் பள்ளி மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் வெளிநபர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் நாள்தோறும் நடை பயிற்சி மற்றும் விளையாடுபவர்கள் கடும் பாதிப்படைந்தனர். பள்ளி மைதானத்தை பொதுமக்கள் உபயோகத்திற்கு தடை விதித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மைதானத்தை திறந்து விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கடும் கட்டுபாடுகளுக்கு இடையே காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவல் பணிக்கு சென்று தாமதமாக வீடு திரும்பும் இளைஞர்கள், அரசு அலுவலர்கள் பலர் மாலையில் நடைபயிற்சி மற்றும் விளையாட செல்ல நேரிடும் போது, அதற்குள் மைதானம் அடைக்கப்படுகிறது.
இதனால் வேறு வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்புவதுடன், சிலர் கடும் அச்சத்துடன் வாகன போக்குவரத்து மிகுதியான கச்சிராயபாளையம் சாலையில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மேலும், பள்ளி மைதானத்தில் சுதந்திர தின மற்றும் குடியரசு தின விழா உள்ளிட்ட அவ்வப்போது அரசு சார்பில் நடத்தப்படும் விழா நாட்களில் முற்றிலும் அனுமதிக்கப்படுவதில்லை. மாவட்டமாக கள்ளக்குறிச்சி திகழும் நிலையில் விளையாட்டிற்கு என்று மைதானம் ஒன்று இல்லாததால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பலர் கடும் அவதியடைகின்றனர்.
விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அத்துறை மேம்பட்டு வருகிறது. எனவே, கள்ளக்குறிச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிதாக விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

